Skip to main content

 “எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை” - தவெக தலைவர் விஜய் அதிரடி

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
No support for any party says Tvk leader Vijay 

விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது மேலும். தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் முடிவு செய்திருந்தார். அதே சமயம் நிர்வாகிகளிடம் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துங்கள்; எப்போதும் தேர்தலுக்குத் தயாராக இருங்கள்; நமது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் காலம் வந்துவிட்டது என நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி வந்தார். இந்த சூழலில் விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் சூட்டப்பட்டு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் கட்சித் தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள். ‘விஜய் மக்கள் இயக்கம்’ பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ‘ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்’ ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி, மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச - ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கக்கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற  ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ (பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவ கொள்கைப்பற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்.‘எண்ணித் துணிக கருமம்’ என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, ’தமிழக வெற்றி கழகம்’ என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.

இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா செயலிழப்பு; ஈரோட்டில் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Strong room CCTV camera malfunction; Sensation in Erode

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.

Strong room CCTV camera malfunction; Sensation in Erode

இதனையடுத்து வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று முன்தினம் (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாட்டுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். 

Strong room CCTV camera malfunction; Sensation in Erode

இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிர்ஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.