Skip to main content

நீதிமன்ற தீர்ப்புக்கு மரியாதை இல்லை! இதற்கு நாட்டு மக்கள் கவலைப்பட வேண்டும்: தா.பாண்டியன் பேட்டி

Published on 03/03/2018 | Edited on 04/03/2018
thapandiyan

 

ஈரோடு சி.என்.சி.  கல்லூரி தமிழ்த்துறை சார்பில்  "இன்றைய பொருளாதாரம்" என்ற தலைப்பில் கருத்தரங்கு இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  தா.பாண்டியன் கலந்து கொண்டு இன்றைய பொருளாதாரம் குறித்து பேசினார். 

 

முன்னதாக  செய்தியாளர்களுக்கு தா.பாண்டியன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசிற்கு இதுதொடர்பாக கெடு விதித்த நிலையில் நாட்கள் கழிகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை கூறி வருகிறார்கள். 

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சிரமம் என்பதை மறைமுகமாக தெரிவித்து வருகிறார்கள். மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்பதை மறைமுகமாக தெரிவித்து வருகிறார்கள். இதன் மூலம் நாட்டில் நீதிமன்ற தீர்ப்பிற்கு மரியாதை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நாட்டு மக்கள் கவலைப்பட வேண்டும். விவசாயம் நாட்டின் தொழில்முறை அல்ல. நாடுமுழுவதும் நதிநீர் பங்கீட்டை முறைப்படுத்த வேண்டும். இந்த விசயத்தில் பிரதமர் மௌனம் காப்பது சரியானது அல்ல. அவரது கருத்தை தெரிவிக்க வேண்டும். 

 

தஞ்சை பெரியகோவிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜன் சிலை அவரது மனைவி லோகமாதேவி சிலை கடத்தி செல்லப்பட்டது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியளிக்கிறது. நாட்டில் சீர்கேடான செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. பிரதமர் உள்ளிட்டோர் வெளிநாட்டு முதலீட்டை பெற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் இதற்கு எந்த பயனும் இல்லை. மாறாக வங்கிகளில் பலர் முறைகேடு செய்து பணத்தை எடுத்து செல்கிறார்கள். இதனை கண்டுபிடித்து தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகத்திற்கு வரவேண்டிய வெள்ளம், புயல் நிவாரண நிதி இதுவரை வரவில்லை. இதை தமிழக அரசு பெற வேண்டும். காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தது வரவேற்கத்தக்கது." என்றார்.


 

சார்ந்த செய்திகள்