Skip to main content

“எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை” - ஆம் ஆத்மி அதிரடி முடிவு!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
No alliance with any party Aam Aadmi Action Decision

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அந்த வகையில் நாட்டின் தலைநகரான டெல்லியில் மொத்தம் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளையும் பாஜக தான் வென்றது. மேலும் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் டெல்லி சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்துக் கூறும்போது, ​​“மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது என்பது கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே தெளிவாகிறது. சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரையில் எந்த கூட்டணியும் அமைக்கப்படவில்லை. ஆம் ஆத்மி கட்சி தனது முழு பலத்துடன் தேர்தலில் போட்டியிடும்.

இந்தியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது என்பது ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக உள்ளது. நாங்கள் மக்களவை தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட்டோம், ஆனால் டெல்லி சட்டமன்ற தேர்தலில், நாட்டில் உள்ள எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. டெல்லி மக்களுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்