Skip to main content

அந்த செய்தி இன்று அதிகாலை நேரத்தில் இடிபோல என்னைத் தாக்கியது..! -மு.க.ஸ்டாலின் 

Published on 21/09/2020 | Edited on 21/09/2020
m meenakshi sundaram - dmk - mla - mk stalin statement

 

 

கீழத்தஞ்சை திராவிட  முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும் -  வேதாரண்யம் தொகுதியின் சட்டமன்ற கழக முன்னாள் உறுப்பினரும் - கொண்ட கொள்கையில் உறுதிமிக்கவருமான, 'மா.மீ' என அன்புடன் அழைக்கப்படும் அண்ணன் மா.மீனாட்சிசுந்தரம் அவர்கள், கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி இயற்கை எய்திய கொடுஞ்செய்தி, இன்று அதிகாலை நேரத்தில் இடிபோல என்னைத் தாக்கியது என இரங்கல் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

 

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும், கழகத்தின் முப்பெரும் விழாவில் மா.மீ. அவர்களுக்கு "பெரியார் விருது" வழங்கி ஒருவாரம் கூட நிறைவுறாத நிலையில், இயற்கையின் இந்த சதியை ஏற்க மனம் மறுக்கிறது.

 

தனது 17-வது வயதில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை உறுப்பினராக இணைத்து கொண்ட மா.மீ. அவர்கள், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் அடியொற்றி, இறுதிவரை சுயமரியாதைக் கொள்கைக்காரராகவே வாழ்ந்து மறைந்துள்ளார்.

 

1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல், கழகம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் முன்னணித் தளகர்த்தராக கலந்து கொண்டவர், மா.மீ. அவர்கள்.

 

"மிசா"வில் ஓராண்டு காலம் சிறையில் இருந்த அஞ்சாத வீரர் அவர்.

 

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு, மக்கள் செல்வாக்குப் பெற்றவராகத் திகழ்ந்து, மக்கள் சேவை ஆற்றினார்.

 

கழகத்தில் - கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பு தொடங்கி, பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.

 

 நிறைவாக, நாகை தெற்கு மாவட்டக் கழக அவைத் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.

 

இத்தகைய சிறப்புக்குரிய மா.மீ. அவர்களுக்கு, இந்த ஆண்டுக்கான "பெரியார் விருது" அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 15-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த 'கழக முப்பெரும் விழா"வில் கலந்து கொண்டு, அவர் அவ்விருதினை நேரடியாகப் பெற்றிருக்க வேண்டும். உடல் நலமில்லாத காரணத்தால், அவர் வர இயலவில்லை.

 

"முப்பெரும் விழா"வில் நான் பேசும்போது, மா.மீ. அவர்களின் அனைத்துச் சிறப்புகளையும் சுட்டிக் காட்டிப் பேசினேன்.

 

 உடல்நலக்குறைவில் இருந்து விரைவில் மீண்டெழுவார் என்று நினைத்தேன்.

 

எப்போதும் கருப்புத் துண்டு  அணிந்து கம்பீரமாக உலவிய அண்ணன் மா.மீ. அவர்கள், "பெரியார் விருது" பெற்ற சில நாட்களிலேயே  மறைவார் என நான் நினைத்தே பார்க்கவில்லை.

 

கழகத்தினரிடமும் பொதுமக்களிடமும் மிகுந்த நன்மதிப்புப் பெற்றிருந்த மா.மீ. அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அவர்களின்  மறைவால் ஆற்றொணாத் துயருறும்  குடும்பத்தினர் - உறவினர்கள் - நண்பர்கள் - கழகத் தோழர்கள் அனைவருக்கும், எனது ஆறுதலை உரித்தாக்குகிறேன்.

 

உடலால் மறைந்தாலும், அவர் ஊட்டிய கொள்கை உரம்; எந்நாளும் கழகம் செழிக்கப் பயன்படும் என்பது திண்ணம்! இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்