Skip to main content

மத்திய பா.ஜ.க. அரசு நடத்தும் அநியாயமான தாக்குதல்... பிற்படுத்தப்பட்ட சமுதாயம் அமைதியாக இருக்காது... மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Published on 25/07/2020 | Edited on 25/07/2020

 

mk stalin

 

"இடஒதுக்கீட்டின் மீது மத்திய பா.ஜ.க. அரசு நடத்தும் அநியாயமான தாக்குதலை - தமிழகத்தில் மட்டுமின்றி; நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது", "மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்திடவும், க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்திடவும்;  பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ஏகப் பிரதிநிதி என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்ட நெடுங்காலமாக இடையறாது போராடி, பிரதமராக 'சமூக நீதிக் காவலர்' வி.பி. சிங் அவர்கள் பொறுப்பேற்றதற்குப் பிறகு பெறப்பட்ட, மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை எப்படியும் ஒழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.


ஏற்கனவே 27 சதவீத இடஒதுக்கீட்டில் 50 சதவீதத்தைக் கூட நிரப்பாமல் வஞ்சித்து - மருத்துவக் கல்வியில் அறவே நிராகரித்து - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்டத்தின்கீழான அடிப்படை உரிமையை 'விதவிதமாக' பாழ்படுத்திவரும் மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது 'க்ரீமிலேயர்' வருமான வரம்பிற்கு 'நிகர சம்பளத்தை' கணக்கில் எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்திருப்பதாக வெளிவரும் செய்திகள்; இடஒதுக்கீட்டின் இதயத்தில் ஈட்டி கொண்டு பாய்ச்சுவது போல் இருக்கிறது.


கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அடியோடு புறக்கணிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு 'மண்டல் கமிஷன்' அளித்த பரிந்துரை - எதிர்கால முன்னேற்றத்திற்கான  திறவுகோலாகவும், உச்சநீதிமன்றம் அந்த இடஒதுக்கீட்டை உறுதிசெய்து கொடுத்த தீர்ப்பு, இருளைப் போக்கும் ஒளிக் கதிராகவும் அமைந்தது. ஆனால், அதில் 'க்ரீமிலேயர்' என்று ஒரு 'தடைக்கல்லை' ஏற்படுத்தி - இடஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை விலக்கி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அதனை முற்றாகவே நீக்க வேண்டும் எனவும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.


1993-இல் ஒரு லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட க்ரீமிலேயருக்கு கணக்கிடப்படும் வருமான வரம்பு, கடந்த 27 ஆண்டுகளில் 9 முறை உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், 1993-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசின் அலுவலகக் குறிப்பாணையில் (Office Memorandum) “மூன்று வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது தேவைப்பட்டால் மூன்று வருடத்திற்கும் குறைவாகவே கூட க்ரீமிலேயர் வருமான வரம்பு உயர்த்தப்பட வேண்டும்” என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டும், இதுவரை நான்கு முறை மட்டுமே க்ரீமிலேயருக்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது; பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் அநீதி ஆகும்.


தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 2015-ஆம் ஆண்டிலேயே “க்ரீமிலேயர் வருமான வரம்பு 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்” என்று தெளிவான பரிந்துரையை வழங்கியிருக்கிறது. அப்போதே பிற்படுத்தப்பட்டோர் சமுதாய நலனுக்கான நாடாளுமன்றக் குழு “க்ரீமிலேயர் வருமான வரம்பு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்” என்று ஒருமனதாகப் பரிந்துரை அளித்துள்ளது.


ஆனால் இவை எதையும் கண்டு கொள்ளாமல் - 'பெயரளவுக்கு' 6 லட்சமாக இருந்த க்ரீமிலேயர் வருமான வரம்பை 8 லட்சமாக மட்டுமே உயர்த்தி - பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை, 27 சதவீத இடஒதுக்கீடு பயனை முழுவதும் அனுபவிக்க விடாமல் மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுத் தடுத்தது. இந்தத் துரோகம் போதாது என்று, முதலில் "சம்பளத்தை க்ரீமிலேயர் வருமானமாக எடுத்துக் கொள்வோம்” என்று; ஆணையத்தில் பா.ஜ.க.,வினரை தலைவராகவும், உறுப்பினர்களாகவும் நிரப்பி, ஒப்புதலைப் பெற்று; இப்போது “நிகர சம்பளத்தை எடுத்துக் கொண்டு க்ரீமிலேயர் வருமானத்தைக்  கணக்கிடுவோம்” என்று துடிப்பது, சமூகநீதிக்கு எதிரானது; அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது; நாட்டின் போர்முனைக்கு முதலில் தடந்தோள் தட்டிப் புறப்படும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்குத் துரோகம் இழைப்பது!


“க்ரீமிலேயர், 27 சதவீத இடஒதுக்கீட்டின் பயனை அடைவதற்குத் தடையாக இருக்கிறது” என்று மத்திய அரசுக்கு 2015-இல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெளிவாகப் பரிந்துரை வழங்கிய போதிலும் - சட்டப்பூர்வமான இடஒதுக்கீட்டின் மீது மத்திய பா.ஜ.க. அரசு நடத்தும் அநியாயமான தாக்குதலை - தமிழகத்தில் மட்டுமின்றி; நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது என்று முன்கூட்டியே தெரிவித்திட விரும்புகிறேன்.

 

http://onelink.to/nknapp


ஆகவே, மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்திடவும், க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்திடவும்;   பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ஏகப் பிரதிநிதி என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.