தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரபடுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக கட்சியின் தலைவர்கள், அவர்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக சார்பில் ஆவடி தொகுதியில் போட்டியிடும் சா.மு.நாசர், திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் வி.ஜி.இராஜேந்திரன், பூவிருந்தவல்லி தொகுதியில் போட்டியிடும் வழக்கறிஞர் கிருஷ்ணசாமி, திருத்தணி தொகுதியில் போட்டியிடும் சந்திரன் ஆகியோரை ஆதரித்து திருநின்றவூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், “இந்த ஆவடி தொகுதி மக்களுக்கு ஒரு முக்கிய கடமை இருக்கிறது. மாஃபா பாண்டியராஜனை தோற்கடிக்க வேண்டும். அ.தி.மு.க.வில் இருந்து கொண்டு பா.ஜ.க. கட்சியை நடத்துகிறவர். அவர் முழுமையான சங்கி. அதனால்தான் அவரைக் குறிப்பிட்டுச் சொன்னேன்.
கீழடி தமிழர் பண்பாட்டை பாரதப் பண்பாடு என்று சொல்லி மழுங்கடித்த அவர் தமிழ் வளர்ச்சிச் துறை அமைச்சர் அல்ல, சமஸ்கிருத வளர்ச்சித்துறை அமைச்சர். அவர் அ.தி.மு.க.வில் இருப்பதற்கு முன்பு, அவரை ஒரு கட்சியில் இருந்து அந்தக் கட்சியின் தலைவர் நீக்கினார் என்பது உங்களுக்கு தெரியும். ஏன் நீக்கினார்? அவர் மாஃபா பாண்டியராஜனாக அல்லாமல், மாஃபியா பாண்டியராஜனாக இருந்தார். அதனால் கட்சியை விட்டு நீக்கினார். அதற்குப்பிறகு அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இப்போது பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அ.தி.மு.க.வில் இருந்து கொண்டிருக்கிறார். அந்த மாஃபியா பாண்டியராஜனை இந்தத் தொகுதியில் இருக்கும் மக்கள் தோற்கடிக்க வேண்டும். அதுதான் உங்கள் கடமை. ஊழல் செய்த காரணத்தினால் முதலமைச்சர் ஜெயலலிதா சிறைக்குச் சென்றவர். இந்தியாவிலேயே எந்த முதலமைச்சரும் ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு சிறைக்குச் செல்லவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் முதலமைச்சர் ஒருவர் ஊழல் செய்து சிறைக்குச் சென்றார்.
பின்னர் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போது ஜெயலலிதா இறந்து விட்ட காரணத்தால் சிறைக்கு செல்லவில்லை. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வரலாற்றை மறந்துவிட்டு பேசுகிறீர்களா? அப்படிப்பட்ட நிலையில் தி.மு.க.வைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? என்ற கேள்வியைத் தான் நான் கேட்க விரும்புகிறேன்.
10 வருடங்களாக உங்கள் ஆட்சி நடக்கிறது. தி.மு.க.வைப் பொறுத்தவரையில் 10 வருடங்களாக ஆட்சியில் இல்லை. உங்கள் ஆட்சியில் இருக்கும் குறைபாடுகளை முறைகேடுகளை நீங்கள் செய்கிற ஊழல்களை, கமிஷனை, கலெக்சனை, கரப்சனை நாங்கள் வரிசையாக ஆதாரங்களோடு சொல்கிறோம். நீங்கள் ஆதாரத்தோடு சொல்லுங்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள். 10 வருடங்களாக மக்களுக்கு இதுபோன்ற பணிகளைச் செய்து இருக்கிறோம் என்று ஆதாரத்தோடு சொல்லுங்கள். அதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம். 10 வருடங்களாக என்ன செய்தீர்கள் என்று நாங்கள் கேட்கிறோம். அதைச் சொல்ல முடியவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
மோடிக்கு சலாம் போட்டு, கையைக் கட்டி, வாயை பொத்தி அடிமையாக இருந்து கொண்டிருக்கிறீர்கள். அதுதான் உங்களுடைய 10 வருட கால சாதனை. 4 வருடங்களாக ஆட்சியை நடத்தி விட்டேன் என்கிறீர்கள். 4 ஆண்டுகளாக மந்திரிகளுக்கும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் நீங்கள் கொள்ளை அடிக்கின்ற பணத்தில் சதவிகித அளவில் பங்கு கொடுத்து ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறீர்களே தவிர, ஜனநாயக முறைப்படி நீங்கள் ஆட்சி நடத்தவில்லை.
பா.ஜ.க. வாஷ் அவுட் அதுவேறு. நாடாளுமன்றத் தேர்தலிலும் வாஷ் அவுட் செய்துவிட்டோம். ஒரே ஒரு அ.தி.மு.க. எம்.பி. வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வில் இருந்தும் ஒரு எம்.எல்.ஏ. கூட சட்டமன்றத்தில் வந்து விடக் கூடாது. அவ்வாறு வந்தால் அவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ., தான். அதை முதலில் மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்” என்று பேசினார்.