அரசியல் கட்சிகளுக்கு தேசிய மற்றும் மாநில அளவிலான கட்சிகள் என்ற அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் சில அளவீடுகளின் அடிப்படையில் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒரு அரசியல் கட்சி தேசிய கட்சியாக இருக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஏதாவது 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறு சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் அல்லது மக்களவை தேர்தலில் ஏதாவது 3 மாநிலங்களில் இரண்டு சதவீத வாக்குகளை பெற வேண்டும் அல்லது ஏதாவது நான்கு மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட மூன்று விதிகளில் ஏதாவது ஒன்றை பூர்த்தி செய்தால் தேசிய அங்கீகாரம் பெற்ற கட்சியாக அங்கீகாரம் கிடைக்கும்.
இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் சார்பில் சமீபத்தில் வெளியான புதிய உத்தரவின் படி இந்தியாவில் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் தான் தேசிய கட்சிகளாக இருக்கின்றன. மேலும் தேசிய கட்சிகளாக இருந்து வந்த திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தேசிய கட்சிகளுக்கான அங்கீகாரத்தை இழந்துள்ளன என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மம்தா பானர்ஜி தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், "திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது தேசிய கட்சிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட பிறகு இது தொடர்பாக அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதை நிரூபித்தால் நான் எனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். மேலும் எங்கள் கட்சி தொடர்ந்து அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்றே அழைக்கப்படும்.
உள்துறை அமைச்சர் என்ற தகுதிக்கு ஏற்ப அமித்ஷாவின் அணுகுமுறை இல்லை என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். நாட்டின் கூட்டாட்சியின் கட்டமைப்பை பாஜக சீர்குலைக்க முயல்கிறது. பாஜகவினர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வலுக்கட்டாயமாக கவிழ்க்கத் தயாராக இருக்கிறார்கள். மக்களுக்காக பாஜகவினர் உழைப்பதில்லை. அரசியல் சாசனத்தையும், வரலாற்றையும் மாற்ற முயற்சிக்கிறார்கள். அதிகாரம் வரும், போகும். ஆனால், ஜனநாயகமும் அரசியல் சாசனமும் என்றென்றும் நிலைத்து நிற்கும்" என்றார்.