நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் புதிய நீதி கட்சி போட்டியிடுகிறது. எனவே புதிய நீதிக் கட்சி சார்பில் கடந்த 6 மாதங்களாக தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறோம். தாமரை சின்னத்தில் போட்டியிட 15 வேட்பார்கள் போட்டியிட தேர்தல் களத்தில் உள்ளனர். குறைந்தது 20 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.
மும்முனை போட்டியாக இருந்தாலும் வேலூர் கோட்டையில் தாமரை மலரும். மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒரு மாதம் உள்ளது. அதனால் அதிமுகவின் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம்” எனத் தெரிவித்தார்.