தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு, அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் கொலை சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பலரும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைத் தூத்துக்குடியில் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்திற்கு கஞ்சா வருவதாக ஊடகத்திலும் பத்திரிக்கையும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதனைத் தடுப்பதற்கு உண்டான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். தமிழக அரசு திறமை இல்லாத அரசாகப் பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். போதைப் பொருளால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சீரழியக் கூடிய காட்சிகள் தொடர்கிறது. தமிழகத்தில் போதைக்கு அடிமையாகி இந்த போதைகளால் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்த வண்ணம் உள்ளன. இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கது.
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். திருநெல்வேலியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அரசியல் கட்சி சேர்ந்த பிரமுகர்கள் கொலை செய்யப்படுவது சர்வசாதாரணமாகத் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பில்லை, பெண் காப்புகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழகத்தின் நிலவுகிறது.
நேற்றைய தினம் திமுக மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசு மாநிலத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள் இதே தி மு க மத்தியில் 13 ஆண்டுக் காலம் கூட்டணி ஆட்சியில் இருந்தார்கள். கடந்த 1999 ஆம் ஆண்டில் இருந்து ஐந்து ஆண்டுக் காலம் திமுக மத்திய பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தது.
அதன் பிறகு காங்கிரஸ் மத்திய ஆட்சியில் இருந்தபோது திமுக திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்கள். மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்ற போதும் திமுக எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாகப் பதவியில் இருந்தனர். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி ஏற்பட்ட போதும் காங்கிரஸ் மத்திய அமைச்சரவை திமுக எம்.பி.க்கள் மத்திய அமைச்சர்களாகப் பதவி வகித்தனர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் காங்கிரஸின் நிதி அமைச்சராக இருந்தார். இவ்வாறு 13 ஆண்டுக் காலம் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சர்களாக இருந்தனர். அப்போது எவ்வளவு நிதியைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தனர். எவ்வளவு புதிய திட்டத்தைத் தொடங்கினார்கள். இதனால் தமிழகம் எவ்வளவு ஏற்றம் பெற்றது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்றைய தினம் தமிழகத்தில் திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. விலைவாசி உயர்ந்து விட்டது. எங்கே பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துவிட்டது. மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை மறைக்க நேற்றைய தினம் திமுக மத்திய அரசின் மீது ஒரு போராட்டத்தை நடத்தி இருக்கிறது. இதுதான் உண்மை” எனத் தெரிவித்தார்.