Skip to main content

கனிமொழியின் கோரிக்கையை மோடி ஏற்றார்! எடப்பாடி ஏற்பாரா? -ராக்கெட் ஏவுதளம் விவகாரம்!

Published on 18/06/2020 | Edited on 18/06/2020

 

                   

Kanimozhi


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணத்தில் இந்திய வின்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) அமைக்கவிருக்கும் ராக்கெட் ஏவுதளம் அமைவதற்காக ஒப்படைக்கப்படும் நில எடுப்புப் பணிகளை ஆய்வு செய்திருக்கிறார் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி.


                    
இஸ்ரோ அமைக்கும் ராக்கெட் ஏவுதளத்தை எப்படியாவது தங்களது மாநிலத்துக்கு கொண்டு சென்று விட வேண்டும் என துடித்தது கேரள அரசு. இதற்காக தங்களின் அனைத்து அரசியல் வலிமையையும் கேரள அரசு பயன்படுத்தியது. இதனையறிந்து, கேரள அரசின் முயற்சிகளை உடைத்து, ராக்கெட் ஏவுதளத்தை குலசேகர பட்டணத்துக்குக் கொண்டு வந்ததில் தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு அதிக பங்குண்டு. அவரின் முயற்சியினாலேயே இந்தத் திட்டம் தென் தமிழகத்துக்குக் கிடைத்தது.

 

ஏவுதளம் அமைவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ‘’ராக்கெட் ஏவுதளத்திற்காக 2,500 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை இஸ்ரோவிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, நில எடுப்புப் பணிகள் 8 பிரிவுகளாக நடக்கிறது. முதல் கட்டமாக 4 பிரிவுகளை உள்ளடக்கிய நில எடுப்புப் பணிகள் முடியும் நிலையில் இருக்கிறது. அவைகள் முடிந்ததும் இஸ்ரோவிடம் நிலத்த ஒப்படைப்போம்’’ என்றார். 

 

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் போது, நேரடியாக 1,000 பேருக்கும் மறைமுகமாக 5,000 பேருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதற்கிடையே, குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையவிருக்கும் நிலையில், ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அப்பகுதியில் அமைவது தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என மத்திய அரசிடமும் தமிழக அரசிடமும் கோரிக்கை வைத்திருக்கிறார் கனிமொழி. 

 

குறிப்பாக, ராக்கெட் ஏவுதளம் அமையவிருக்கும் பகுதியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாங்குநேரி சிறப்பு பொருதார மண்டலத்தில் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கித்தர வேண்டும். உதிரிபாகங்கள் உற்பத்தி தொழில் நிறுவனங்கள் அமைவதன் மூலம் நேரடியாக 15,000 பேர்களுக்கும், மறைமுகமாக 30 ஆயிரம் பேர்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அப்போது, தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி அதிகரிப்பதுடன், வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்லும் தமிழக இளைஞர்களின் அவலங்கள் தடுக்கப்படும். மேலும், தென் தமிழகத்தில் நடக்கும் சாதி மோதல்களும் ஒழிக்கப்படும் நிலை உருவாகும். தொழில் நிறுவனங்கள் வருவதினால் இத்தனை நன்மைகள் நடக்கும் என்பதால் நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் காலியாக இருக்கும் நிலங்களை ராக்கெட் உதிரிபாகஙள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே கனிமொழியின் கோரிக்கையாக இருக்கிறது.      

 

இந்த நிலையில், இதே கோரிக்கையுடன் தமிழக அரசை அணுகியுள்ளது இஸ்ரோ. இது குறித்து தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ள இஸ்ரோ அதிகாரிகள், ‘’நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள 2,500 ஏக்கர் நிலத்தில் 1,500 ஏக்கர் நிலங்களை ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்‘’ எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

http://onelink.to/nknapp


                  
கனிமொழியின் கோரிக்கையை ஏற்று குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய உத்தரவிட்டார் பிரதமர் மோடி! அதேபோல ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நாங்குநேரியில் இடம்தர வேண்டும் என்கிற கோரிகையை எடப்பாடி ஏற்பாரா? என்கிற கேள்வி தமிழக தொழில் நிறுவனங்களிடம் எதிரொலிக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்