Skip to main content

“நாட்டைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்” - ஜோதிமணி தீவிர பிரச்சாரம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Jothimani during campaign for Vote for Congress to save the country

கரூர் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் நாட்டை காப்பாற்ற வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதிமணி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கரூர் மாவட்டம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் சட்டமன்றத் தொகுதி, ஆண்டா கோயில் மேல்பாகம் மற்றும் கீழ் பாகம் ஊராட்சிகளில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சின்ன ஆண்டாங்கோயில் ரோடு எஸ்பிஐ காலனி பகுதியில் வாக்கு சேகரிக்க வருகை தந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு பொதுமக்கள், பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து பேசிய ஜோதிமணி, “தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தலில், வாக்களிக்கும் போது வாக்காளர்கள் ஒவ்வொரு பிரச்சனைகளையும் பார்த்து அதை தீர்க்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள். இந்தத் தேர்தலில் இந்திய நாட்டை பத்து ஆண்டுகளாக ஆண்ட பாரதிய ஜனதா கட்சி பிடியிலிருந்து மீட்பதற்கு, வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். அப்பொழுதுதான் நரேந்திர மோடி அரசு அகற்றப்படும். தமிழகத்தில் திமுக ஆதரவளிக்கும் ஒரு அரசு மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், இம்முறை அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சமையல் எண்ணெய்  90 ரூபாய்க்கு விற்பனையானது, தற்பொழுது ரூபாய் 300-க்கும் விற்பனையாகிறது. ரூ. 410க்கு விற்பனையான சமையல் எரிவாயு சிலிண்டர் தற்பொழுது 1200 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ரூபாய் 500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வேலைவாய்ப்பின்மை அதிகரித்ததால் கல்விக் கடன் பெற்று, கல்வி பயின்ற இளைஞர்களை, வங்கிகள் ஜப்தி நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நரேந்திர மோடி அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல் கல்விக்கடனை ரத்து செய்யாமல் ஏமாற்றிவிட்டது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மாணவர்களின் கல்விக் கடன் முழுவதும் ரத்து செய்யப்படும்” என ஜோதிமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சிகளான திமுக மற்றும் மக்கள் நீதி மையம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் சிபிஐ, சிபிஎம் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்

சார்ந்த செய்திகள்