Skip to main content

“பொருளை வெளியில் வைத்து கதவைப் பூட்டுவது சாதாரண விஷயம்” - சசிகலா புஷ்பா

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

“It's normal for them to lock the door after putting things outside” - Sasikala Pushpa

 

ராஜ்யசபா எம்.பியாக சசிகலா புஷ்பா தேர்வு செய்யப்பட்ட போது அவருக்கு டெல்லியில் தங்குவதற்காக மத்திய அரசால் நார்த் அவென்யூவில் வீடு ஒதுக்கப்பட்டது. ஆனால் அவரது பதவிக்காலம் முடிவடைந்து 2 வருடம் ஆகியும் இதுவரையில் அரசு குடியிருப்பைக் காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார். அவரது குடியிருப்பை முறையாக காலி செய்யும்படி அரசு சார்பில் சசிகலா புஷ்பாவிற்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தற்போது பதவியில் இருக்கும் அதிமுக எம்.பி விஜயகுமார் டெல்லியில் வீடு ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளார்.

 

இதனிடையே அவரது வீட்டில் அடிக்கடி மது விருந்து நடப்பதாகவும் இதனால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் அக்கம் பக்கத்தினர் புகார் அளித்து வந்தனர்.  ஆனால் இதை எதையும் கண்டுகொள்ளாத சசிகலா புஷ்பா அரசு குடியிருப்பை காலி செய்யாமல் இருந்ததால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை வெளியேற்றிய அரசு அதிகாரிகள் வீட்டைப் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

 

இதனை அடுத்து நேற்று சசிகலா புஷ்பா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு வீடு கொடுத்த விசயம் என்று சொல்லி இன்று முழுதும் வைரலாக ஒரு விஷயம் போய்க்கொண்டு இருக்கிறது. நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்து பதவிக்காலம் முடிந்த பிறகு எக்ஸ். எம்.பி. கோட்டா என்று ஒன்று இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு எம்.பி.க்களும் தாங்கள் இருக்கும் வீட்டினை மூன்று மாதத்திற்கு ரெனியுவல் செய்து வீட்டில் இருக்கக் கூடிய வாய்ப்பை மத்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது.   

 

தமிழகத்தில் வேலைப் பழு அதிகம் இருந்ததால் நான் டெல்லி செல்லவில்லை. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர்கள் காலி செய்ய சொல்வது இயல்பானது. காலி செய்யுங்கள் என்று ஒரு நோட்டீஸ் கொடுப்பார்கள். நாம் இருந்தால் கையில் கொடுப்பார்கள். இல்லையென்றால் வீட்டில் ஒட்டுவார்கள். இரண்டு தடவை கடிதம் போடுவார்கள். அதை வாங்குவதற்கு நாம் அங்கு இல்லை என்றால் பொருளை எடுத்து வெளியில் வைத்து கதவைப் பூட்டுவது சாதாரண விஷயம்.

 

வீட்டில் காவலர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தாண்டி யாராவது வந்து எடுத்து வைத்து விடுவார்களா. அடிக்கடி வேண்டுமென்றே ஒரு வதந்தியை பரப்பி உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதால் தான் இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று நினைத்தேன். எங்களுக்கே டெல்லியில் சொந்த வீடுகள் இருக்கிறது. காலி செய்ய சொன்னவுடன் அதை எடுத்துக்கொண்டு போக தானே செய்ய வேண்டும். 

 

அரசியலுக்கு பெண்கள் வரவே கூடாதா? அரசியலுக்கு பெண்கள் வந்தால் அவர்களது தனிப்பட்ட விவகாரங்களைக் குறித்து தவறாகத்தான் பேசுவீர்களா? எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. கட்சி இருக்கிறது. இப்படி நீங்கள் தொடர்ந்து செய்யும் போது அதற்கு எதிராகப் புகார் கொடுக்கும் அளவிற்கு தள்ளுகிறீர்கள்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்