கோவையில் பிரதமர் பிறந்தநாள் விழா கொண்டாட்ட குறும்பட போட்டியின் பரிசளிப்பு விழா 27.09.2019 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குநர் கஸ்தூரி ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
விழாவில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கலந்துகொண்டு பேசியதாவது:-
இந்தியை மத்திய அரசு திணிப்பதாக இல்லை. மற்றொரு மொழியை தெரிந்துகொள்வதில் தவறு இல்லை. இதனை தமிழகத்தில் அரசியலாக்குகிறார்கள். பொது மொழி ஒன்று இருப்பது அவசியம். ஒரு மொழி இருப்பதால் இன்னொரு மொழி அழியும் என்ற பிரசாரம் ஒரு கும்பலால் தவறாக இங்கு பரப்பப்படுகிறது.
தமிழகத்தில் 90 சதவித பேருக்கு இந்தி தெரியாததால்தான் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கு மொழியும் ஒரு காரணம். பிரதமர் மோடியின் பேச்சை நான் மொழிமாற்றம் செய்ய விரும்புகிறேன். அதற்கான உரிமம் வாங்கலாம் என நினைக்கிறேன்.
பள்ளிகளில் இந்தி மொழி இருப்பது நல்லது. இங்கு இருக்கும் குழந்தைகள் புரிந்து கொண்ட அளவுக்கு, இங்கு உள்ள மூத்த அரசியல்வாதிகளும் புரிந்து கொண்டால் எவ்வளவோ நல்லது. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், அவர்களுக்குள் ஒரு பயம் இருக்கிறது. இந்தியை எல்லோரும் கற்றுக்கொண்டால் நாமும் கற்க வேண்டியது வரும், மோடி பேசுவது புரிந்து விட்டால் நாமும் மாறிவிடுவோமோ என்ற ஒரு பதட்டமும், பயமும் இருக்குமோ என்றுதான் தோன்றுகிறது என்றார்.
இந்த விழாவில் பேசிய கஸ்தூரி ராஜா, பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இந்தியாவிற்கு நல்ல தலைவர் கிடைத்துள்ளார். பிரதமர் மோடியால் இந்தியா காப்பாற்றப்பட்டுவிட்டது. இனி தமிழகம் மட்டும்தான் காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.