Skip to main content

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சரமாரி கேள்வி!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Chief Minister M.K. Stalin barrage question

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது.

இதனையொட்டி பிரதமர் மோடி நேற்று (31.03.2024)  எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி கொடுத்தது என்பதை புதிய உண்மைகள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியது. மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது காங்கிரஸை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்று. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவது குறித்து காங்கிரஸ் 75 ஆண்டுகளாக உழைத்து எண்ணிக்கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கச்சத்தீவு விவகாரம் குறித்த ஆங்கில நாளேட்டின் கட்டுரையை குறிப்பிட்டு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்று (01.04.2024) வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தின் நலனைக் காக்க தி.மு.க. எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவில் வெளிவரும் புதிய விவரங்கள் தி.மு.க.வின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக அவிழ்த்துவிட்டுள்ளன. காங்கிரசும், தி.மு.க.வும் குடும்ப கட்சிகள். அவர்கள் தங்கள் சொந்த மகன்கள் மற்றும் மகள்கள் உயர வேண்டும் என்று மட்டுமே கவலைப்படுகிறார்கள். அவர்கள் வேறு யாரையும் பொருட்படுத்துவதில்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அடாவடித்தனம், குறிப்பாக நமது ஏழை மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

Chief Minister M.K. Stalin barrage question

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான். 1.) தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?. 2.) இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?. 3.) பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?. திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே... பதில் சொல்லுங்க மோடி” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே கச்சத்தீவு விவாகாரம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.