Skip to main content

நவீன தெனாலிராமனாக மோடி மக்களை ஏமாற்றுகிறார்... -முத்தரசன்

Published on 13/02/2019 | Edited on 13/02/2019


 

muththarasan



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாவட்ட மாநாடு சிதம்பரத்தில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேகர் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- வருகிற 27-ந்தேதி கோவையில் ‘இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம்’ என்கிற கோஷத்தை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியதுவம் வாய்ந்த அரசியல்மாநாடு நடைபெற உள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, திராவிடர் கழக தலைவர் வீரமணி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ம.தி.மு.க. தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள்.
 

கடந்த தேர்தலில் பிரதமர் மோடி சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை தருவதாக மோடி தெரிவித்தார். இதை நம்பி வாக்களித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
 

வேலியே பயிரை மேய்கிறது என்ற பழமொழிக்கேற்ப நாட்டை ஆளுகின்ற மோடி தலைமையிலான பாஜகவிடமிருந்து காக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களைப் பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி வெற்று வாக்குறுதிகள் வழங்குவதில் மன்னர். அவர் மக்களையும் நாடாளுமன்றத்தையும் ஏமாற்றிவருகிறார். நவீன தெனாலிராமனாக செயல்படுகிறார். அவர் தான் அப்படி என்றால் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மோடிக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு மக்கள் விரோத செயலில் ஈடுபட்டுவருகிறார். சேலம் அருகே சேலத்தாம்பட்டி ஏரி 300 ஏக்கரை துர்த்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

 
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவேண்டும்,  மோடிக்கு அடிமையாக இருக்கக்கூடாது.


கூட்டத்தில் மாநில துணை செயலாளர் சுப்புராயன், மாநில செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் மணிவாசகம், சிதம்பரம் நகர செயலாளர் தமிமுன்அன்சாரி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதனைத்தொடர்ந்து புதன்கிழமை நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் புதிய மாவட்ட செயலாளராக பொ.துரை உள்ளிட்ட 39 மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்