ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாஜக வேட்பாளர் நயினார நாகேந்திரன் மீது மர்ம நபர்கள் சோடா பாட்டில் வீசினர்.
நேற்று இரவு 9 மணிக்கு ஒரத்தநாட்டில் அதிமுக கூட்டணியில் இருக்கும் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர். நடராசனுக்கு வாக்கு சேகரித்து எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்து பறந்த ஒரு செருப்பு எடப்பாடியின் கான்வாய் மீது விழுந்து கிடந்தது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மக்களவை தொகுதியில், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட ரெகுநாதபுரத்தில் தனது பிரச்சாரத்தை துவக்கினார் பாஜக வேட்பாளர் நயினார நாகேந்திரன். பெரியப்பட்டிணம் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது சில மர்ம நபர்களால் சோடா பாட்டில் வீசப்பட்டது. அப்போது வேட்பாளர் அருகிலிருந்த உடையப்பன் என்பவரின் மண்டை உடைந்தது. இதனால் இப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதில் காயமடைந்த உடையப்பன் என்பவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பாஜக வேட்பாளர் துரைக்கண்ணன் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.