Skip to main content

“அரசின் தவறுகளால் இளைஞர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்” - அண்ணாமலை

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
Annamalai says Youth is being swayed by the government's mistakes

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்று தெரியாமல் இளைஞர்கள் தமிழக அரசால் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழக அரசுப் பணிகளுக்காக, கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, 2A முதன்மைத் தேர்வு முடிவுகள், 10 மாதங்கள் கடந்தும் இன்னும் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது திமுக அரசு. தேர்வுகள் நடைபெறும்போதே, சில தேர்வு மையங்களில் காலம் தாழ்த்தி தேர்வு தொடங்கியதாகவும், வினாத்தாள்கள் வெளியானதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தேர்வாளர்கள் மறுதேர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

ஆனால், தேர்வுகள் முறையாகவே நடைபெற்றன என்று கூறிய தமிழக அரசு, முடிவுகளை வெளியிடக் காலம் தாழ்த்தி வருவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் தங்களுக்கு வேண்டப்பட்டவரை நியமிப்பதற்காக, ஒரு ஆண்டுக்கும் மேலாக அந்தப் பதவியைக் காலியாகவே வைத்திருக்கும் திமுக அரசு, போட்டித் தேர்வு எழுதி, அரசுப் பணிகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களிடம் மட்டும் நியாயமாக நடந்து கொள்ளப் போகிறதா என்ற கேள்வி எழுகிறது. 

ஆட்சிக்கு வந்ததும் மூன்று லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, தேர்வு முடிவுகளை வெளியிடவே மாதக்கணக்கில் தாமதமாக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றி விட்டதாக மேடைக்கு மேடை பொய் சொல்லி யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்?

உடனடியாக குரூப் 2, 2A அரசுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதோடு, காலதாமதத்துக்கான காரணங்களையும் பொதுவெளியில் கூற வேண்டும். அரசுப் பணிகளுக்காகத் தேர்வுகள் எழுதி, எப்போது முடிவுகள் வரும் என்றே தெரியாமல், அரசின் தவறுகளால் அலைக்கழிக்கப்படும் இளைஞர் சமுதாயம், இனியும் இதுபோன்ற திறனற்ற செயல்பாடுகளைப் பொறுத்துக் கொள்ளாது. இன்னும் நாம் 1960களில் இல்லை. இனி வரும் காலங்களில், தேர்வு தேதி அறிவிக்கப்படும் அன்றே, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியையும் அறிவிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்