Skip to main content

“அ.தி.மு.க வாக்காளர்களே..” - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Anbumani Ramadoss appeal to ADMK voters

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அந்த வகையில், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணியில் இருக்கின்ற பா.ம.க வேட்பாளரான சவுமியா அன்புமணியை ஆதரித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பாலக்கோடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “தருமபுரி தொகுதியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். சவுமியா அன்புமணி ஐ.நா சபைக்கு சென்று பெண் உரிமைகளை பற்றியும், பெண் குழந்தைகளை பற்றியும் குரல் கொடுத்தவர். எங்கே பெண்களுக்கு பிரச்சனை என்றாலும், என்னை விட அவர் தான் முதலில் சென்று இருப்பார். 

நாம் கால காலமாக திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்து விட்டோம். நமது வாழ்க்கை அப்படியே தான் இருக்கிறது. எந்த விடியலும் இல்லை. உணர்வுப்பூர்வமாக உங்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் அரசியல் செய்கிறோம். நல்ல முடிவை எடுங்கள். அதிமுக வாக்காள பெருமக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். இந்த தேர்தலில் உங்களின் வாக்குகளை வீணாக்க வேண்டாம். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் வரப்போவதில்லை. பிரதமராகவும் வரப்போவதில்லை. ஆகையால் இந்த முறை எங்களுக்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுங்கள்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்