Skip to main content

பாஜகவிற்கு எதிராக உருவாகும் கூட்டணி; ஒரே நாளில் இரு பெரும் தலைவர்களைச் சந்தித்த நிதிஷ் குமார்

Published on 24/04/2023 | Edited on 25/04/2023

 

Alliance forming against BJP; Nitish Kumar met two great leaders on the same day

 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இன்று (24/04/2023) பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரைச் சந்தித்தார். அகில இந்திய அளவில் பாஜகவை எதிர்க்க வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் இரு முதலமைச்சர்களின் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.  

 

இந்தச் சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “பாஜகவிற்கு எதிரான கூட்டணியில் எனக்கு எவ்வித ஈகோவும் இல்லை. இந்த தேர்தல் பாஜகவிற்கும் மக்களுக்கும் இடையேயானதாக மட்டுமே இருக்கப்போகிறது. நிதிஷ் குமாரிடம் ஒரேயொரு கோரிக்கை மட்டும் வைத்துள்ளேன். பீகாரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினால், நமக்கான அடுத்த இலக்கு என்ன என்று முடிவு செய்யலாம். ஆனால், முதலில் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற செய்தியை மக்களுக்கு கொடுக்க வேண்டும். எனக்கும் ஆட்சேபனை இல்லை (அனைவரும் ஒன்றிணைவதில்) என்று முன்பே சொல்லிவிட்டேன். பாஜகவை பூஜ்ஜியம் ஆக்க வேண்டும். பாஜக ஊடகங்களின் உதவியாலும், அவர்கள் நாளுக்கு நாள் சொல்லும் போலி கதைகளாலும் பெரிய ஹீரோக்களாக மாறிவிட்டனர்” எனக் கூறினார்.

 

மம்தா பானர்ஜியின் சந்திப்பிற்கு பின் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை நிதிஷ் குமார் சந்தித்து பேசினார். லக்னோவில் உள்ள அகிலேஷ் யாதவின் இல்லத்திற்கு வந்த நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி யாதவை பூங்கொத்து கொடுத்து அகிலேஷ் யாதவ் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் அமையவுள்ள கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.  

 

 

இதன் பின் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “நாட்டின் ஜனநாயக விழுமியங்களை அழிக்க பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் மற்றும் வறுமையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற இந்திய மக்களுடன் நாங்கள் இங்கே இருக்கிறோம். பாஜக அரசு வெளியேறினால் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும்” எனக் கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், “பாஜகவினர் இந்தியாவின் வரலாற்றை மாற்ற விரும்புகிறார்கள். அவர்கள் முதலில் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் வெறும் விளம்பரம் மட்டுமே செய்கிறார்கள். பெரும்பாலான எதிர்க்கட்சிகளை கூட்டணியில் திரட்டி வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட உள்ளோம்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்