Skip to main content

மாணவர்களின் உயிருடன் விளையாடும் விபரீத மனப்போக்கைக் கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் கண்டனம் 

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

mk stalin


கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதில் ஆரம்பத்தில் இருந்தே அலட்சியத்துடனும், முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகளுடனும் நடந்து கொள்வதைப் போலவே, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்துவதிலும் அவசரம் காட்டுகிறது அ.தி.மு.க. அரசு". "மாணவர்களின் உயிருடன் விளையாடும் விபரீத மனப்போக்கைக் கைவிட்டு, பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும்'' என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை தொடர்கிற நிலையில், ஐந்தாம் கட்ட ஊரடங்கு குறித்து உறுதியாக எதையும் இப்போது சொல்ல முடியாத சூழலில்,  ஜூன் 1ஆம் நாள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் என அறிவிக்கும் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் பிடிவாதமான நிலைப்பாடு, மாணவர்கள் மீதான அக்கறையற்ற தன்மையையே காட்டுகிறது.
 

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று எண்ணிக்கை குறித்த குளறுபடிகளும், பரிசோதனை எண்ணிக்கை குறித்த வெளிப்படையற்ற குழப்பமும் நீடிக்கின்ற நிலையிலும், நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரித்து வருவதைத் தடுக்க முடியவில்லை. 11 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; மகாராஷ்ட்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாவது மாநிலம் தமிழ்நாடு என்ற மோசமான இடத்துக்கு வந்துவிட்டது. இதில் பச்சிளம் குழந்தைகளும் உண்டு என்கிற பரிதாபத்தில், பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாது என்ற அடிப்படையிலேயே தேர்வுகளை நடத்துவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பதில் அலட்சியமும் அகங்காரமுமே தெரிகிறது.
 

பெற்றோரும் மாணவர்களும் பொதுத்தேர்வு வேண்டாம் எனச் சொல்லவில்லை. நோய்த்தொற்றும் ஊரடங்கும் நீடிக்கின்ற பதற்றம் நிறைந்த காலத்தில் அவசரப்பட்டு நடத்த வேண்டாம் என்பதைத்தான் வலியுறுத்துகிறார்கள். அரசாங்கமோ மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’  வகுப்பு, வெளியூர் சென்ற மாணவர்கள் திரும்பி வர ‘இ-பாஸ்’ என நெருக்கடியை உருவாக்கி,  பெற்றோரையும் மாணவரையும் அச்சுறுத்துகிறது. இதனால் அவர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
 

“கல்கி” வார இதழில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரின் தாயான கே.ஏ.பத்மஜா என்பவர், தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம் வெளியாகியுள்ளது. அதில், கொஞ்சம் எங்கள் மனவலியைப் புரிந்துகொள்ளுங்கள் எனும் பொருளில் அவர் எழுதியிருப்பவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டும் திரு. செங்கோட்டையன் அவர்களுக்குச்  சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.
 

“புதிய பாடத்திட்டம், ஆங்கிலம் முதல் தாள், இரண்டாம் தாள் எனத் தனித்தனியாய் கிடையாது - ஒரு பரீட்சையாய் நூறு மதிப்பெண்களுக்கு இருக்கும்; கூடுதல் வகுப்பு வைக்கக்கூடாது; கேள்வித்தாள் குறித்த தெளிவற்ற அறிக்கைகள்; எந்த விதத்திலும் புரிந்துகொள்ள முடியாத வரலாற்றுப் பாடச் சொற்கள்.
 


இப்படி வருடம் முழுவதும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் கொடுத்த குழப்பங்களும் மன உளைச்சல்களுக்கும் அளவே கிடையாது. இருந்தும் எல்லாவற்றையும் நாங்கள் மவுனமாக ஏற்றுக்கொண்டோம். எங்கள் பிள்ளைகளின் பத்தாம் வகுப்புத் தேர்வு மட்டுமே எங்களுக்குக் காரணமாக இருந்தது.
 

இப்போது நாடே, உலகமே முடங்கிக் கிடக்கும் இந்த நாட்களில் பத்தாம் வகுப்பு பிள்ளைகள் மட்டும் எப்படிப் படித்துக் கொண்டு இருப்பர்? ஆன்லைன் வகுப்புகள் எல்லாப் பிள்ளைகளுக்கும் கிடைப்பது எப்படி சாத்தியம்?
 

பத்தாம் வகுப்பு மார்க் ஷீட் அவசியம் என்று மட்டும் பேசுகிறீர்கள்? ஏன், கொள்ளை நோய்க் காலத்தில் தேர்வின்றிக் கொடுக்கப்பட்ட சான்றிதழ் என்ற ஒன்றை நீங்கள் பிள்ளைகளுக்கு வழங்கக்கூடாது? அவசியம் இருக்குமெனில், விரும்பிய பாடம் படிக்க அந்தக் கல்வி மையமே ஒரு நுழைவுத் தேர்வு வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு சலுகை கொடுக்கலாமே?
 

தயவுசெய்து, நீங்கள் கரோனாவில் சாவும் மனிதர்களின் உயிரைக் கவனியுங்கள். குடும்பங்களில் இருக்கும் வறுமையை முற்றும் நீக்க வழிவகையை நடைமுறைப்படுத்துங்கள். கரோனா நோய்த்தொற்று இனி இருக்காது என்ற நிலையை உருவாக்குங்கள். அதற்குப் பிறகு நாங்கள் எங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். சகஜநிலை வந்த பிறகு ஒரு மூன்று வாரம் பாடங்களைத் திருப்புதலுக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அதற்குப் பிறகு தேர்வு வையுங்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.
 

ஒரு தாயின் தவிப்பாகவும் உள்ளக்குமுறலாகவும், பெற்றோரின் அக்கறையாகவும் ஆதங்கமாகவும் உள்ள இந்தக் கடிதத்தின் வரிகள்தான், பத்தாம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவ - மாணவியருடைய பெற்றோரின் மனநிலையாக உள்ளது. அதனைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், ஜூன் 1-ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்றும், ஆசிரியர்களுக்குப் பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அழிச்சாட்டியமாக அறிவித்துக் கொண்டே இருக்கிறார்.
 

http://onelink.to/nknapp

 

தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள் பலரும், ஊரடங்கு காலம் நிறைவடைந்த பிறகு, நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், பள்ளிகள் திறக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வழக்கமான முறையில் வகுப்புகள் நடைபெற்று, அதற்குப்பின் பொதுத்தேர்வு நடத்துவதே மாணவர்களின் மன - உடல்நலனுக்கும் எதிர்கால நலனுக்கும் உகந்தது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
 

 

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதில் ஆரம்பத்திலிருந்தே அலட்சியம் காட்டி வருவதுடன், முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகளையும், அறிவியலுக்குப் புறம்பான ஆரூடங்களையும்  தெரிவித்து வருகிறது அ.தி.மு.க. அரசு. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் காட்டும் அவசரகதியும் அதுபோலத்தான் உள்ளது. மாணவர்களின் உயிருடன் விளையாடும் விபரீத மனப்போக்கைக் கைவிட்டு, பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்துமாறு  மீண்டும் வலியுறுத்துகிறேன்'' எனக் கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister MK Stalin praises chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில்  இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.