மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் மூடா மோசடி வழக்கு என அழைக்கப்படும் இந்த விவகாரம் தற்போது கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இத்தகைய சூழலில் தான் ஊழல் தடுப்புச் சட்டம் 1998 சட்டத்தில் 17 வது பிரிவு மற்றும் புதிதாக தற்பொழுது அமலுக்கு வந்திருக்கும் பாரதிய நாகரிக் சுரக் ஷா சம்ஹிதா வழக்கின் சட்டப் பிரிவின் 218வது பிரிவு என இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் சித்தராமையாவை விசாரிக்க அம்மாநிலத்தின் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கி இருக்கிறார். சித்தராமையா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாதயாத்திரை போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேநேரம் சித்தராமையாவை விசாரிக்க மாநில ஆளுநர் அனுமதி அளித்துள்ள நிலையில் ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தைக் கர்நாடக அரசு நாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதோடு கர்நாடகா ஆளுநர் பாஜகவின் அழுத்தத்தாலும், மத்திய அரசின் அழுத்தத்தாலும் செயல்பட்டு இவ்வாறு செயல்பட்டு வருகிறார் எனக் காங்கிரஸ் பதில் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. இந்த அனுமதி காரணமாக ஏற்படக்கூடிய நிகழ்வுகள், கர்நாடகாவில் எந்த மாதிரியான விளைவுகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது குறித்து சித்தராமையா ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் வீட்டுமனை முறைகேடு விவகாரத்தில் முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க அனுமதி அளித்த கர்நாடக ஆளுநரைக் கண்டித்து ஆகஸ்ட் 19 ஆம் தேதி (19.08.2024) மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனக் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தன்னுடைய முழு ஆதரவு எப்பொழுதும் இருக்கும் என அம்மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆளுநரின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது. அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எந்த வித சட்டவிரோத செயலும் நடைபெறவில்லை. இதில் முதலமைச்சர் சொந்த லாபம் காணவில்லை. இழந்த நிலத்துக்கு ஈடாக பணம் தரப்பட்டிருக்கிறது. சட்டப்படி இழப்பீடு தரப்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். ஒட்டுமொத்த கட்சியும் முதலமைச்சருக்கு ஆதரவாக இருக்கிறது' என தெரிவித்துள்ளார் டி.கே.சிவக்குமார்.