ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
இதனையொட்டி இன்று நண்பகல் 12.35 மணியளவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் டெல்லி வருகிறார். அதேபோல் பிற்பகல் 01.40 மணியளவில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் டெல்லி வருகிறார். பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்ற பின்பு முதல் முறையாக டெல்லி வருகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று மாலை டெல்லி வருகிறார். அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்பு முதல் முறையாக ஜோ பைடன் டெல்லி வருகிறார். மேலும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலாவால், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டிலியனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஏற்கனவே டெல்லிக்கு வருகை புரிந்துள்ளனர். டெல்லிக்கு வருகை புரிந்த சர்வதேச தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். இதன் மூலம் ஜோ பைடன் இன்று, நாளை, நாளை மறுநாள் என 3 நாட்கள் இந்தியாவில் இருக்கிறார். அதே சமயம் அதிபர் ஜோ பைடன் இன்று மாலை பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்துகிறார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையே தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.