Skip to main content

அவர்களின் நிலையை தாங்க முடியவில்லை - மேகாலயா ஆளுநர் உருக்கம்!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

satya pal malik

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ட்ராக்டர் பேரணி, ரயில் மறியல், சாலை மறியல் ஆகியவற்றை நடத்திய விவசாயிகள், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்வரை வீட்டிற்கு திரும்பப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர். 

 

இந்தநிலையில் மேகாலயா மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், மத்திய அரசு விவசாயிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.  

 

இதுகுறித்து சத்ய பால் மாலிக் கூறியதாவது: 

“ஒரு நாய் இறந்தாலும் அதற்கு இரங்கல் அனுசரிக்கப்படுகிறது. 250 விவசாயிகள் இறந்துள்ளனர், ஆனால் யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை. விவசாயிகளின் போராட்டம் இவ்வாறு நீண்டகாலமாக தொடர்ந்தால், மேற்கு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் பாஜக வலுவிழக்கும். போராட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் பேசினேன். விவசாயிகளை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பக்கூடாது. அரசாங்கம் அவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும்.

 

நான் அவர்களுக்கு ஊறு விளைவிப்பதாக அரசாங்கம் நினைத்தால் நான் ஆளுநர் பதவியிலிருந்து ஒதுங்கிவிடுவேன். நான் ஆளுநராக இல்லாவிட்டாலும் விவசாயிகளுக்காகப் பேசுவேன். விவசாயிகளின் நிலையை என்னால் தாங்க முடியவில்லை. மக்கள் எம்.எல்.ஏ.க்களை தாக்குவதால், பாஜக தலைவர்களால் தங்கள் கிராமங்களைவிட்டு வெளியேற முடியவில்லை. உடன்பாட்டை விரும்பாதவர்கள் அரசுக்கு ஊறு விளைவிப்பவர்கள். எனது வார்த்தைகள் கட்சிக்கு தீங்கு விளைவிக்காது. மாறாக விவசாயிகள், யாராவது ஒருவராவது தங்களுக்காகப் பேசுகிறார்கள் என நினைப்பார்கள்.”

இவ்வாறு மேகாலயா ஆளுநர் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார்.