Skip to main content

“ஏழைப் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதை காங்கிரஸ் விரும்பவில்லை” - மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Union Minister Smriti Irani says Congress does not want to empower poor women" -

 

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து இன்று (19.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று புதிய நாடாளுமன்றத்தில் முதல் அமர்வு நடைபெற்று வருகிறது.

 

அதே சமயம் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மாநிலங்களவையில் ஒப்புதலையும் பெற்றிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த மசோதா நிலுவையிலேயே உள்ளது. இதையடுத்து இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டு வந்து மகளிர்க்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு ஆதாரமளிக்கும் இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, “ராகுல் காந்தியின் குடும்பம் தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் மட்டும் அக்கறை கொண்டுள்ளது. ஏழை அல்லது பட்டியலின மற்றும் பழங்குடி பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை. இன்றைக்கு சோனியா காந்தி இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. மசோதா மீதான விவாதம் நடந்தபோது சோனியா காந்தியின் மகனும் வெளியேறினார். இந்த மசோதாவை யார் ஆதரிப்பது என்று சபாநாயகர் கேட்டபோது, பா.ஜ.க மட்டும் தான் ஆதரவளித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்காதது இன்னும் துரதிர்ஷ்டவசமானதாக இருக்கிறது” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்