Skip to main content

“என் மனைவி விதவையாகக் கூடாது...” - உலகை நெகிழச் செய்த இந்திய மருத்துவர்

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

telangana doctor harshavardhan australia incident viral issue

 

தெலுங்கானா மாநிலம் கம்மன் என்ற பகுதியைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஹர்ஷவர்தன் (வயது 34). இவர் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவருக்கும் தெலுங்கானாவில் உள்ள இவர் வசித்த அதே பகுதியில் வசித்து வந்த ஹேமா என்ற பெண்ணுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி பெற்றோர் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மீண்டும் ஆஸ்திரேலியா நாட்டிற்குச் சென்ற ஹர்ஷவர்தன் விரைவில் மனைவியையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

 

சில மாதங்கள் கழிந்த நிலையில், ஹர்ஷவர்தன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென ஒருநாள் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் மரணம் ஏற்படுவதையும் அறிந்து கொண்ட ஹர்ஷவர்தன் தான் இறந்துவிட்டால் தன் மனைவி இளம் வயதிலேயே விதவையாகி அவருடைய வாழ்க்கையும் கேள்விக் குறியாகும் என்று எண்ணியவர் தனது மனைவியுடன் பேசி விவாகரத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். விவாகரத்துக்குப் பிறகு தன் மனைவிக்குப் பொருளாதார ரீதியாக எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில்  தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்திருந்தார்.

 

ஹர்ஷவர்தன் தனது உடல்நிலை பற்றி விளக்கி தனது இறப்புக்குப் பின்னர் தனது உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி அதற்குரிய விமான கட்டணத்தையும் ஏற்கனவே செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவில் ஹர்ஷவர்தன் மரணமடைந்து விட்டார். அதனைத் தொடர்ந்து அவரது இறுதி ஆசையின்படி ஏற்கனவே அவர் செய்து வைத்திருந்த ஏற்பாடுகளின் அடிப்படையில் அவருடைய உடல் விமானம் மூலம் ஆஸ்திரேலியாவில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள பேகம் பேட் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி அவருக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இவரின் இந்த செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்