Skip to main content

பலத்த காற்று; படகுகள் கடற்கரை ஓரம் நிறுத்தி வைப்பு!

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
strong winds; Boats parked on the beach

தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இராமநாதபுரம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் விரிவாக்கம் மற்றும் பயிற்சித்துறையின் உதவி இயக்குநர் நேற்று (16.05.2024) வெளியிட்ட அறிவிப்பில், “இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை செய்தியின்படி மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40 முதல் 45 கி.மீ வரை அதிகபட்சமாக 55 கி.மீ வரை வீசக்கூடும். மற்றும் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

எனவே, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மீனவர்களுக்கு இந்த வானிலை எச்சரிக்கையினை மீனவ கிராம ஆலயங்கள் வாயிலாக அறிவிப்பு செய்திடுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் சுமார் 1200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி 5 ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று (17.05.2024) கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போன்று விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய 14 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Chance of rain in 32 districts of Tamil Nadu

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாகத் தமிழகத்தில் இன்று(12.7.2024) முதல் 18 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கோவை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மத்திய அமைச்சருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
TN CM MK Stalin letter To the Union Minister

புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களில் 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் இன்று (11.07.2024) சிறை பிடித்துச் சென்றனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பயும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 13 மீனவர்களையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது மீனவர்கள் 13 பேருக்கும் ஜூலை 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11-7-2024) கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள், IND-TN-08-MM-364, IND-TN-16-MM-2043 மற்றும் IND-TN-08-MM-1478 ஆகிய பதிவெண்கள் கொண்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது இலங்கைக் கடற்படையினரால் இன்று (11-7-2024) கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடித் தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நம் நாட்டு மீனவர்கள். வரலாறு காணாத நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். தற்போது 173 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மீனவர்கள் இதுபோன்று சிறை பிடிக்கப்படுவது மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதோடு, அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திட வேண்டும். இதுதொடர்பாக உரிய தூதரக நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.