மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு சிவசேனா அணியில் இணைந்ததன் காரணமாக, அஜித் பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் பிறகு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்தர பவார் என்ற அணியை உருவாக்கி, மகாராஷ்டிராவில் விரைவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் மனைவி, பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். மகாராஷ்டிரா, தானே பகுதியில் நேற்று (26-09-24) நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் அணியின் மூத்த தலைவர் ஜிதேந்திர அவ்ஹாத்தின் மனைவி ரூதா அவ்ஹாத் கலந்து கொண்டு பேசினார்.
அந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் முன்னிலையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், “ஒசாமா பின்லேடன் பிறக்கும் போதே பயங்கரவாதியாக பிறக்கவில்லை. சமூகத்தினால் தான் அவர் அதற்கு தள்ளப்பட்டார். பின்லேடனின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து, அவர் எப்படி பயங்கரவாதி ஆனார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்துல் கலாம் எப்படி ஜனாதிபதி ஆனாரோ அதே போல் தான் ஒசாமா பின்லேடனும் பயங்கரவாதி ஆனார். ஆனால், பின்லேடனை, சமூகம் தான் அவரை பயங்கரவாதி ஆக்கியது” என்று பேசினார். பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுடன், முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாமை ஒப்பிட்டுப் பேசிய இந்த பேச்சை, பா.ஜ.க கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.