Skip to main content

மே.வங்கம், அசாம் மாநிலங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

Voting for the second phase of west bengal and assam states

 

மேற்கு வங்கம், அசாம் ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (01.04.2021) தொடங்கியது. 

 

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதேபோல், மேற்கு வங்கம் மாநிலத்தில் 8 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாவும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 2ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது. 

Voting for the second phase of west bengal and assam states

 

அதன் தொடர்ச்சியாக, மேற்கு வங்கம் மாநிலத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தில் 47 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த மார்ச் 27ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இன்று (01/04/2021) மேற்கு வங்கத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், அசாமில் 39 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்குச் சாவடி மையத்துக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து, வாக்களித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகளில் 19 பெண்கள் உட்பட 171 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அசாம் மாநிலத்தில் 39 சட்டமன்றத் தொகுதிகளில் 26 பெண்கள் உட்பட 345 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

Voting for the second phase of west bengal and assam states

 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த சுவேந்து அதிகாரியை எதிர்த்து முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். 

Voting for the second phase of west bengal and assam states

 

மேலும், நந்திகிராம் பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டு, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்