பிரதமர் மோடி மாதந்தோறும் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் என்ற பெயரில் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரை நிகழ்த்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஜூன் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி அமெரிக்க செல்லவுள்ளதால் மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அப்போது நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதியை ஒருபோதும் மறக்கமுடியாது. அந்த நாளில் தான் நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. இந்திய வரலாற்றின் கருப்பு பக்கமாக அது அமைந்தது. லட்சக்கணக்கானோர் அவசரநிலையை முழு மனதுடனும் எதிர்த்தனர். அப்படி எதிர்த்தவர்கள் பல துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, காசநோய் ஒழிப்பதில் இந்தியா பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் போது ஐ.நா தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளேன் என்று கூறினார். ஆனால் பலரும் மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசுவார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் மவுனம் காத்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பாஜக தலைமையிலான ஆட்சி நடந்துவரும் மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 98 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாகக் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி மணிப்பூருக்குச் சென்றார். அந்த சமயம், டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டின் முன் குக்கி இன மக்களைக் காப்பாற்றக் கோரி குக்கி இனப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு அங்கு அமைதி நிலைமை திரும்ப பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கலவரக்காரர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், மணிப்பூர் கலவரம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து இருந்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக மணிப்பூர் சென்று இரு தரப்பினரிடையேயும் பேச்சு வார்த்தை நடத்தினார். இருப்பினும் அங்கி மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. இதில், பல வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அம்மாநிலத்தில் உள்ள மத்திய இணை அமைச்சர் ரஞ்சன் சிங் வீட்டின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் தொங்ஜு என்ற இடத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்குள் புகுந்த கலவரக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளனர்.
“இன்னொரு மன்கிபாத் மணிப்பூர் பற்றி மௌனமாக முடிந்துள்ளது. பேரிடர் மேலாண்மையில் சிறந்த திறனைப் பற்றி பெருமை பேசும் பிரமர் மோடி, முழுக்க மனிதனால் நடக்கும் மணிப்பூர் பேரிடர் பற்றி என்ன நினைக்கிறார். இன்னமும் அவரிடம் இருந்து அமைதிக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை. பிஎம் கேர் நிதியைத் தணிக்கை செய்யாதது போல், மணிப்பூரைப் பற்றி பிரதமர் மோடி கவலைப்படாமல் இருப்பது சந்தேக கேள்வியை எழுப்புகிறது” எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இப்படி மணிப்பூர் மாநிலமே பற்றி எறியும் சூழலில் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் அது தொடர்பாகப் பேசுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதைப் பற்றிப் பேசாமல் இருந்தது பலரும் ஏமாற்றியுள்ளது.