கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் அனல் மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி என தென்னிந்திய மாநிலங்களுக்கும் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
என்.எல்.சி நிறுவனம் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கவல்ல ஆற்றல் சக்தி ஆகியவற்றில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தி, நெய்வேலி மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகள், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்கள் மற்றும் அந்தமான் தீவுகளிலும் மின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
என்.எல்.சி நிறுவனம் தனது துணை நிறுவனமான என்.எல்.சி - தமிழ்நாடு மின் நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும் மின் நிலையத்தையும் சேர்த்து மணிக்கு மொத்தம் 6,60,000 யூனிட் (6,600 மெகாவாட்) மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையங்களை இயக்கி வருகிறது.
அதன் ஒருபகுதியாக தற்போது நாட்டின் வடகிழக்கு மாநிலமான அஸாமில் ரூ. 5,500 கோடி மதிப்பீட்டில், 1000 மெகாவாட் நிறுவு திறன் கொண்ட, புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறை சார்ந்த, மின் நிலையங்களை அமைக்க, அம்மாநில மின் விநியோக நிறுவனத்துடன் என்.எல்.சி இந்தியா நிறுவனம் நேற்று திஸ்பூரில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறைகளுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் முன்னிலையில் என்.எல்.சி இயக்குனர் மோகன் ரெட்டி மற்றும் அஸ்ஸாம் மின்விநியோக மேலாண் இயக்குனர் குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் என்.எல்.சி இந்தியா நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் ராகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.