Skip to main content

ஹோட்டலில் எவ்வளவு செலவு செய்கிறார் என நான் கேட்கவா? - ஆளுநர் செயல்பாட்டால் மம்தா ஆவேசம்! 

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

mamata

 

மம்தா தலைமையிலான மேற்குவங்க அரசுக்கும், அம்மாநில ஆளுநர் ஜகதீப் தன்கருக்கும் தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, மேற்குவங்க ஆளுநர்  ஜகதீப் தன்கருக்கு எதிராக பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

 

மேலும் இன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சுதிப் பந்தோபாத்யாய், ஆளுநர் ஜகதீப் தன்கரை தங்கள் மாநிலத்தில் இருந்து திரும்பப்பெறுமாறு இன்று குடியரசு தலைவரை சந்தித்து வலியுறுத்தினார். இந்தநிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜகதீப் தன்கரை ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார்.

 

கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மம்தா இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது; ஆளுநர் ஜக்தீப் தன்கரை ட்விட்டரில் பிளாக் செய்துவிட்டேன். நாங்கள் என்னமோ அவரது கொத்தடிமை என்பது போல், தினமும் அரசு அதிகாரிகளை குறிவைத்து அவர்களை மிரட்டும் விதமாக ட்விட் செய்கிறார்.

 

கடந்த ஒரு வருடமாக நாங்கள் தவித்து வருகிறோம், பல கோப்புகளுக்கு அவர் அனுமதியளிக்கவில்லை. ஒவ்வொரு கோப்பையும் நிலுவையில் வைத்திருக்கிறார். அவர் எப்படி கொள்கை முடிவுகளைப் பற்றி பேச முடியும்?. அரிசி மூட்டை எங்கிருந்து வருகிறது என மா கேண்டீன்களுக்கான நிதி குறித்து கேட்கிறார். தாஜ் பெங்கால் ஹோட்டலில் இருந்து உணவு வாங்க எவ்வளவு செலவிடுகிறார் என நான் கேட்கவா?அதற்கான பில் என்னிடம் இருக்கிறது. 

 

அவர் மாநிலத்தின் தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோரின் போன்களை ஒட்டுக்கேட்கிறார். அவர்களை  அச்சுறுத்துகிறார். பிரதமர் ஏன் அவரை [கவர்னரை] நீக்கவில்லை? பெகாசஸ் கவர்னர் மாளிகையில் இருந்து செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு மம்தா தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்