Skip to main content

“தேர்தலுக்கு எங்களிடம் பணம் இல்லை” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Mallikarjun Kharge said they don't have money for elections

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்த மக்களவைத் தேர்தலை எதிர்க்கொள்ள பணம் இல்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

கலபுரகி பகுதியில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “காங்கிரஸ் கட்சிக்கு மக்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம் வங்கிகளில் உள்ளது. ஆனால், அந்த நிதியை பயன்படுத்த முடியாத அளவுக்கு மத்திய அரசு வங்கி கணக்குகளை முடக்கிவிட்டனர். வருமான வரித்துறையினர் அதிக தொகையை அபராதமாக விதித்துள்ளனர். அதனால் தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை. எங்கள் கட்சியின் கணக்கு மூடப்பட்டுவிட்டது. எங்களின் ரூ.200 முதல் ரூ.300 கோடியை அவர்கள் நிறுத்தினால், தேர்தல் எப்படி நடக்கும்?. 

பா.ஜ.கவிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உள்ளது. அவர்களின் திருட்டு வெளியே வரும் என்பதால், அவர்கள் பெற்ற தேர்தல் பத்திரங்கள் பற்றி வெளியிடவில்லை. அவர்களின் தவறான செயல்கள் வெளியே வரும் என்பதால் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை வெளியிட வரும் ஜூலை வரை அவகாசம் கேட்கிறார்கள்” என்று கூறினார். 

சமீபத்திய சூழலில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் இன்று காலையில் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது. கடந்த 2018 - 2019 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. அதோடு 45 நாட்கள் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதற்காக ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது. 

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.