ரயிலை தவறான ரயில்நிலையத்திற்கு தவறுதலாக மாற்றிவிட்டதில், ரயிலில் பயணம் செய்த பயணிகள் கோபமடைந்துள்ளனர்.
பானிபட் - புதுடெல்லி வழித்தடத்தில் ஒரு பயணிகள் ரயிலும், சோனிபட் - பழைய டெல்லி வழித்தடத்தில் ஒரு பயணிகள் ரயிலும் இன்று காலை பயணித்துக் கொண்டிருந்தன. இந்த இரு ரயில்களின் வழித்தட பெயர்கள் மற்றும் அவை சென்று சேரும் நேரத்தில் இருந்த ஒற்றுமையும் அஸ்லாம் என்ற ரயில்வே அதிகாரியை குழப்பியிருக்கின்றன. இதனால், புதுடெல்லி நோக்கி செல்லவேண்டிய பயணிகள் ரயிலை, பழைய டெல்லி ரயில்நிலையத்திற்கு அஸ்லாம் மாற்றி அனுப்பியிருக்கிறார். இந்த இரண்டு ரயில்களும் சரியாக காலை 7.38 மணிக்கு சாதர் பஜார் ரயில்நிலையத்தை அடைந்தபோதுதான், வழித்தடத்தில் குழப்பமேற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், புதுடெல்லி நோக்கி செல்லவேண்டிய ரயில் திருப்பி அனுப்பப்பட்டது.
இந்த குழப்பத்திற்குக் காரணமான அஸ்லாமை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுபோல் குழப்பங்கள் ஏற்படுவது மிக அரிது எனக்கூறியுள்ள ரயில்வே நிர்வாகம், இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.