தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் உள்ள கோவில்களில் யானைகள் பெருமளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. திருவிழாவின் போதும் கோவிலின் விஷேச தினங்களிலும் கோயில் உற்சவங்களிலும் யானைகளின் பங்கு என்பது அதிக அளவில் உள்ளன. அதுமட்டுமின்றி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் யானைகளிடம் ஆசீர்வாதம் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும், கேரளாவில் உள்ள அனைத்து முக்கியமான கோயில்களிலும் யானைகள் கண்டிப்பாக இருக்கும். மேலும் அங்கு யானைகளை வைத்தே பல திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
இருப்பினும் கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் தொடர்ந்து பல இன்னல்களுக்கு ஆளாவதாக பீட்டா போன்ற அமைப்பு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது. இதற்கிடையில் இதற்கு தீர்வு காணும் விதமாக கேரளாவில் உள்ள ஒரு கோயிலில் ‘ரோபோ யானை சேவை’ ஒன்றை தொடங்கி உள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் பீட்டா அமைப்பு சார்பில் ரோபோ யானை தானமாக வழங்கப்பட்டுள்ளது. நிஜ யானை போலவே தோற்றமளிக்கும் இந்த ரோபோ யானைக்கு துதிக்கை, காது, தந்தம் என அனைத்தும் உள்ளது. 10 அடி உயரமும் 800 கிலோ எடையும் உள்ள இந்த யானையின் மேல் 4 பேர் வரை உட்காரலாம் எனக் கூறப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிலில் உள்ள ரோபோ யானையிடம் ஆசிர்வாதம் வாங்கிச் செல்கின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சிவாஜி