Skip to main content

ஹேமந்த் சோரன் கைது; “உச்சநீதிமன்றமே கேட்க மறுத்தால் எங்கு செல்வது” - கபில் சிபல்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Kapil Sibal says for Hemant Soran arrested in supreme court

ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்நிலையில் ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை, ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம் என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து, விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று (02-02-24) பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த சோரன் தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தது. அப்போது, ஹேமந்த சோரன் மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்துக்கு செல்ல அறிவுறுத்தியது. இதனையடுத்து, ஹேமந்த சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “பாதிக்கப்பட்டவர்களின் முறையீட்டை உச்சநீதிமன்றமே கேட்க மறுத்தால் எங்கு செல்வது? எந்தெந்த வழக்குகளுக்கு உச்சநீதிமன்றத்துக்கு வரலாம். எவற்றுக்கு வரக்கூடாது என்று அறிவித்து விடுங்கள்.

இந்திய வரலாற்றில் பதவியில் இருந்த முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இதற்கு முன் நடந்ததில்லை. இந்தியாவில் எதிர்க்கட்சி முதலமைச்சர்களே இருக்கக் கூடாது என்பதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசின் நோக்கம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், ஹேமந்த சோரனை போல் நடத்த ஒன்றிய பா.ஜ.க அரசு திட்டமிடுகிறது. டெல்லியிலும் பா.ஜ.க அரசை ஏற்படுத்துவதே ஒன்றிய பா.ஜ.க அரசின் நோக்கம். ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வெளியே வர முடியாதவாறு மேலும் 10 வழக்குகளை தொடருவார்கள். ஹேமந்த் சோரனை சிறையில் அடைத்துவிட்டு, மக்களவை தேர்தலில் ஆதாயம் பெறுவதே பா.ஜ.க.வின் நோக்கம்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்