சுமார் 14 லட்சம் பாதுகாப்பு வீரர்கள் பணியாற்றும் இந்திய முப்படையில், 2010 முதல் 2019 ஆம் ஆண்டு வரை மொத்தமாக 1,110 வீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்ட முப்படைகளையும் சேர்த்து மொத்தம் 14 லட்சம் பேர் இந்தியாவின் பாதுகாப்புக்காக இரவு பகலாக உழைத்து வருகின்றனர். நாட்டின் பாதுகாப்புக்காக தங்களை உயிரையும் பணயம் வைக்கும் இவர்கள், பல தனிப்பட்ட காரணங்களால் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, "2010-2019-க்குள் 12 லட்சம் வீரர்களை கொண்டுள்ள ராணுவத்தில் 895 வீரர்களும், கப்பற்படையில் 32 வீரர்களும், விமானப்படையில் 185 வீரர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைகளுக்கான முக்கிய காரணமாக, குடும்பத்தின் பணப்பிரச்சனை, திருமண முரண்பாடு, உடல்நிலை ஆகியவற்றால் ஏற்படும் மன உளைச்சலே என கூறப்பட்டுள்ளது.
மேலும், வீரர்களின் மன உளைச்சலை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. யோகா, மனநல ஆலோசனைகள் வழங்குதல், தரமான உணவுகள், குடும்பத்தினருடன் தங்கும் வசதி, சரியான விடுமுறை என இதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.