Skip to main content

பாகிஸ்தானில் ரயில் கடத்தல்; 27 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை!

Published on 12/03/2025 | Edited on 12/03/2025

 

pakistan balochistan province  jaffar express train incident related video 

பாகிஸ்தானில் உள்ள காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் மீது பலுசிஸ்தான் தீவிரவாத அமைப்பினர் சமீப காலமாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற விரைவு ரயிலை நேற்று (11.03.2025) கிளர்ச்சிப்படையினர் கடத்தினர். இந்த கடத்தல் சம்பந்தமாக பலோச் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அந்த அறிக்கையில், “ரயிலில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே சமயம் ரயில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் மற்ற பயணிகளை விடுவித்துவிட்டோம். 100 பேர் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

இது தொடர்பாக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் கொலை செய்யப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக பலுசிஸ்தானின் மாக் பகுதியில் பெஷாவர் - குவெட்டா இடையே இயக்கப்படும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆயுதமேந்திய நபர்களால் தாக்கப்பட்டதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அந்த வகையில் ஊடகம் ஒன்றின் சார்பில் தெரிவிக்கையில், “9 பெட்டிகள் கொண்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸில் இருந்த 450 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் எந்த தொடர்பும் கிடைக்கவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தாதரில் உள்ள பனையூர் ரயில் நிலையம் அருகே ஜாபர் எக்ஸ்பிரஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டன.

இந்த ரயிலைச் சுற்றி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் ரயில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். ரயில் பயணிகளும் காயமடைந்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ரயிலை கிளர்ச்சிப்படையினர் கடத்தப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.  இந்த ரயிலில் இருந்த பாகிஸ்தான்  ராணுவ  வீரர்கள் 27 பேரைச் சுட்டுக் கொன்றனர். ரயிலில் இருந்த 400க்கும் மேற்பட்டோரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 150க்கும் மேற்பட்டோர் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைக்கிறது. 

சார்ந்த செய்திகள்