நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இந்நிலையில் முந்தைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர்களை மீண்டும் தனது அமைச்சரவையில் இடம் பெற முயற்சித்தார். ஆனால் இந்த இரு தலைவர்களும் உடல்நிலையை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் இடம் பெற விருப்பமில்லை என தெரிவித்தனர். இருப்பினும் அவர்களின் ஆலோசனை படி அமைச்சர்களை நியமித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பரிந்துரையின் பெயரில் இந்திய வெளியுறவுத்துறை செயலராக பணியாற்றிய சுப்ரமணியம் ஜெய்சங்கரை இந்திய வெளியுறவு துறை அமைச்சராக தேர்ந்தெடுத்தார். இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய செயல் தலைவர் ஜே. நட்டா முன்னிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளதாக டெல்லி அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.