Skip to main content

இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
India coalition MPs struggle

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதே சமயம் தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும் அடுத்த 5 ஆண்டுகளுக்குக் கூட்டணிக் கட்சிகளின் பிடியில் தான் ஆட்சி இருக்கப்போகிறது.

மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஜுன் 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்து. இதனையடுத்து 18வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்பி பர்துஹரி மஹ்தாப்க்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பர்த்ருஹரி மஹ்தாபுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

India coalition MPs struggle

இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் முன் அமைந்துள்ள மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகள் அகற்றப்படுவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. இது குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கையில் நாடாளுமன்ற வளாகத்தில் தூய்மை மற்றும் புனரமைப்பு பணி மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. தலைவர்களின் சிலைகள் ஏதும் அகற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அதன்படி பிரதமர் மோடி மக்களவையில் எம்.பி.யாக உறுதிமொழி ஏற்றார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் வளாகத்தில் அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை ஏந்தி இந்தியா கூட்டணி கட்சியைத் சேர்ந்த எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையை இடம் மாற்றம் செய்ததைக் கண்டித்தும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகவும் இந்தியா கூட்டணி குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி,  காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லீகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி எம்.பி.,  திமுகவைச் சேர்ந்த கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சார்ந்த செய்திகள்