Skip to main content

குஜராத் கோத்ரா கலவர வழக்கில் 35 பேர் விடுதலை; நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

gujarat godhra rail related incident court judgement released

 

கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தின் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கரசேவகர்கள் 1700 பேர் அயோத்திக்கு ஆன்மீக பயணம் சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து அகமதாபாத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் பயணம் செய்துகொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், குஜராத் மாநிலம் கோத்ரா ஸ்டேஷனுக்கு வந்து நின்றது. அப்போது கரசேவகர்கள் இருந்த ரயில் பெட்டி அருகே சிலர் கூட்டமாக நின்று கோஷம் எழுப்பியபடி இருந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கரசேவகர்கள் பயணித்த எஸ் 6 பெட்டியில் திடீரென நெருப்பு பற்றி எரியத் தொடங்கியது.  தீ வேகமாக அடுத்தடுத்த பெட்டிகளிலும் பற்றி எரியத் தொடங்கியது. இந்த நெருப்பில் சிக்கிக் கொண்ட பொதுமக்களும், கரசேவகர்களும் வெளியே வரமுடியாமல் அலறித் துடித்தார்கள். இந்த சம்பவத்தில் 14 குழந்தைகள், 27 பெண்கள் என மொத்தம் 59 பேர் பலியானார்கள்.

 

இதனைத் தொடர்ந்து குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. அந்த வகையில் பஞ்ச மஹால் மாவட்டம் கலோல், டெலோல் மற்றும் டெரோல் நிலையம் ஆகிய இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில் 3 பேர் பலியாயினர். இது தொடர்பான வழக்கில் 52 பேரை குஜராத் மாநில போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பஞ்ச மஹால் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையில் இருந்தபோதே வழக்கில் சம்பந்தப்பட்ட 17 பேர் உயிரிழந்தனர். மேலும் மீதி உள்ள 35 பேர் மீது தொடர்ந்து வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 130 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு சாட்சிகளை நீதிமன்றத்தில் அளித்தனர். சுமார் 20 ஆண்டுக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 12 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பின் விவரங்கள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

 

பஞ்ச மஹால் மாவட்டம் ஹலோல் நகர கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ் திரிவேதி அளித்த தீர்ப்பில், "இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதற்கான சாட்சியாக அவர்களிடம் இருந்து எவ்வித ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை. எனவே இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர். இந்த கலவரத்தால் அமைதியை விரும்பும் குஜராத் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் இது திட்டமிட்ட கலவரம் என்று மதச்சார்பற்ற ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொய்ப் பிரசாரம் செய்தது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்