Skip to main content

கர்நாடகாவில் திராவிட மாடல்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராகுல்!

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Free bus travel for women if Congress comes to power in Karnataka

 

கர்நாடகாவில் மே மாதம் 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சியிலிருக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 

 

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

 

மக்களைக் கவரும் வகையில் முக்கிய வாக்குறுதிகளை மாறி மாறி அரசியல் கட்சிகள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவசப் பயணம் என ராகுல்காந்தி அறிவித்துள்ளார். 

 

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், 18 முதல் 25 வயது வரை உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் நேற்று மங்களூருவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸின் 5வது வாக்குறுதியாக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று ராகுல் காந்தி அறிவித்தார்.

 

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் மிக முக்கியமான திட்டம் என்று குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்