Skip to main content

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்: ஆட்சியமைக்கப்போவது யார்? - ஏபிபி- சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு வெளியீடு!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

rahul - amitshah- aravind kejriwal

 

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், இந்த ஐந்து மாநிலங்களிலும் அடுத்து ஆட்சியமைக்கப்போவது யார் என ஏபிபி ஊடகமும் சி-வோட்டர்ஸும் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளன.

 

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசத்தில் ஏபிபி - சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பின்படி, பாஜக ஆட்சியைத் தக்கவைக்கவுள்ளது. தேர்தலில் பாஜக 41.3 சதவீத வாக்குகளையும், சமாஜ்வாடி கட்சி 32 சதவீத வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 15 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 6 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

மேலும், பாஜக 241 முதல் 249 இடங்களைப் பெறும் எனவும்,  சமாஜ்வாடி 130 முதல் 138 இடங்களைப் பெறும் எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சி  15 முதல் 19 இடங்கள் வரையும், காங்கிரஸ் 3 முதல் 7 இடங்கள் வரையும் பெறும் எனவும் அந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

 

பஞ்சாப்

பஞ்சாப் மாநில தேர்தலில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்றும், ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவாகும் எனவும் ஏபிபி - சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. அம்மாநில தேர்தலில் ஆம் ஆத்மி 36 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 32 சதவீத வாக்குகளையும், ஷிரோமணி அகாலிதளம் 22 சதவீத வாக்குகளையும், பாஜக 4 சதவீத வாக்குகளையும், மற்ற கட்சிகள் 6 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

சட்டமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் பார்க்கும்போது, ஆம் ஆத்மி 49 முதல் 55 இடங்களையும், காங்கிரஸ் 30 முதல் 47 இடங்களையும், ஷிரோமணி அகாலிதளம் 17 முதல் 25 இடங்களையும் வெல்லும் என அந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் பாஜக ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது.

 

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜக ஆட்சியைத் தக்கவைக்கவுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சட்டமன்றத் தேர்தலில் பாஜக 45 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 34 சதவீத வாக்குகளையும், ஆம் ஆத்மி 15 சதவீத வாக்குகளையும், மற்ற கட்சியினர் 6 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

 

தொகுதி அடிப்படையில், பாஜக 42 முதல் 46 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 21 முதல் 25 இடங்களையும், ஆம் ஆத்மி 4 இடங்கள் வரையும் வெல்லலாம் என அந்தக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

 

மணிப்பூர்

மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியமைப்பதில் கடும் போட்டி ஏற்படும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அம்மாநில தேர்தலில் பாஜக 36 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 34 சதவீத வாக்குகளையும், நாகா மக்கள் முன்னணி 9 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 21 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு கூறுகிறது.

 

மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 21 - 25 இடங்களையும், காங்கிரஸ் 18 முதல் 22 இடங்களையும், நாகா மக்கள் முன்னணி 4 - 8 இடங்களையும், மற்றவர்கள் 1 முதல் ஐந்து இடங்களையும் வெல்லும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

 

கோவா

கோவா மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜக ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. அம்மாநில தேர்தலில் பாஜக 38 சதவீத வாக்குகளையும், ஆம் ஆத்மி 23 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 18 சதவீத வாக்குகளையும், மற்ற கட்சியினர் 21 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

சட்டமன்றத் தொகுதிகள் அடிப்படையில், பாஜக 24 முதல் 28 இடங்களையும், காங்கிரஸ் 1 முதல் 5 இடங்களையும், ஆம் ஆத்மி 3 முதல் 7 இடங்களையும், மற்றவர்கள் 4 முதல் 8 இடங்களையும் வெல்வார்கள் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

 

ஏபிபி - சி-வோட்டர்ஸின் கருத்துக்கணிப்பின்படி, தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்கவுள்ளது. மேலும், மணிப்பூர் மாநிலத்திலும் அதிக இடங்களில் பாஜக வெல்லவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.