
உணவு தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது குளிர்சாதப் பெட்டியுல் ஒரு நாயின் தலை கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், மொஹாலி பகுதியில் மோமோஸ் மற்றும் ஸ்பிரிங் ரோல் தயாரிக்கும் உணவு தொழிற்சாலை ஒன்று கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து தினமும் ஒரு குவிண்டாலுக்கு மேல் மோமோஸ் மற்றும் ஸ்பிரிங் ரோல்களை உற்பத்தி செய்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மாசடைந்த நீர் மற்றும் அழுகிய காற்கறிகளைப் பயன்படுத்துவதாகக் தகவல் பரவியது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து உள்ளூர்வாசிகள் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், உணவுத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் உறைந்த இறைச்சி, பழுதடைந்த இயந்திரம் மற்றும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது, ஒரு குளிர்சாதன பெட்டியில் நாயின் தலை ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், மோமோஸ், ஸ்பிரிங் ரோல்ஸ் மற்றும் சட்னி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்தனர். நேபாளியைச் சேர்ந்த தொழிலாளர்கள் உண்பதற்காக இந்த நாயின் தலை வைக்கப்பட்டதாகவும் ஒருபுறம் கூறப்படுகிறது.