பாறையின் மீது ஏறி நின்று புகைப்படம் எடுக்க முயன்ற பெண் ஒருவர் காற்றாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு பெண் மீட்கப்பட்டுள்ளார்.
ஷிவரன கிராமத்தைச் சேர்ந்த ஹம்சா என்ற பெண் ஒருவர் தன்னுடைய தோழிகளுடன் மை டாலா ஏரிக்கு சென்றுள்ளார். அப்பொழுது அந்த பகுதிகளை சுற்றிப்பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ஹம்சா தன்னுடைய பெண் தோழியுடன் பாறை மீது நின்றபடி ஆபத்தான முறையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தடுமாறி காற்றாற்று வெள்ளத்தில் விழுந்து பாறை இடுக்குகளுக்கு நடுவே சிக்கிக்கொண்டார்.
உடனடியாக தீயணைப்பு துறை எனக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நேற்று இரவு முதலே இளம்பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனால அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும் அதிகப்படியாக குவிக்கப்பட்டனர். சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளம்பெண் ஹம்சா உயிருடன் மீட்கப்பட்டார். செல்ஃபி மோகத்தால் இளம்பெண் ஒருவர் பாறை இடுக்குகளின் இடையே விழுந்து மீட்கப்பட்ட சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர்ந்து நீர் நிலைகளில் ஆபத்தான முறையில் புகைப்படம் எடுக்க வேண்டாம் என தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை கொடுத்து வரும் நிலையில் இது போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.