Skip to main content

மணிப்பூர் குறித்துப் பேசிய அமித்ஷா; ஆவேசமாகப் பதில் அளித்த கூட்டணி எம்.பி.

Published on 11/08/2023 | Edited on 11/08/2023

 

The coalition Mp responded on amitshah speech

 

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் கடந்த 8 ஆம் தேதி மக்களவையில் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு துணைத் தலைவர் கௌரவ் கோகோய் எம்.பி. விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.

 

இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக நேற்று முன்தினமும் நடைபெற்றது. மக்களவையில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். இதையடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் நேற்று பதிலளித்துப் பேசினர்.

 

அப்போது பேசிய அமித்ஷா, “மணிப்பூர் கலவரத்தை வைத்து அரசியல் செய்வதை அனுமதிக்க முடியாது. மணிப்பூரில் கலவரம் நடந்தது உண்மைதான். ஆனால் நடந்த கலவரத்தை யாரும் ஆதரிக்கவில்லை. பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியான உடனே அரசு நடவடிக்கை எடுத்தது. மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண மெய்த்தி மற்றும் குக்கி சமூக மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இதை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது. மணிப்பூரில் தற்பொழுது வன்முறை குறைந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

 

மேலும், அவரது அந்தப் பேச்சில், மியான்மர் நாட்டில் இருந்து ஊடுருவிய பழங்குடியின மக்கள் தான் வன்முறைக்கு காரணம் எனப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மிசோரம் தேசிய முன்னணியின் மாநிலங்களவை எம்.பி.யான வான்லவேனே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர்,  “நான் மிசோரத்தைச் சேர்ந்தவன். நான் பழங்குடி மற்றும் எம்.பி; மணிப்பூரில் உள்ள பழங்குடிகள் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என உள்துறை அமைச்சர் கூறினார். நாங்கள் மியான்மரீஸ்கள் அல்ல.  நாங்கள் இந்தியர்கள்” என ஆவேசமாகப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்