தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் அந்த பொறுப்பிலிருந்து விலகினார். இந்நிலையில், இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் வணிக ரீதியிலான திட்டங்கள், பங்குச்சந்தையின் ஏற்ற - இறக்கம் குறித்த கணிப்புகள் ஆகியவற்றை சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்ததாக இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி கூறி அதிர்ச்சியளித்தது.
இமயமலையில் வசிக்கும் சாமியார் (?) ஒருவரிடம், தான் பல்வேறு ஆலோசனைகளைப் பெற்றதாக சித்ரா ராமகிருஷ்ணா விசாரணையில் தெரிவித்ததாகக் கூறியுள்ள செபி, தாங்கள் திரட்டிய ஆவணப்படி இமயமலை சாமியாரே தேசிய பங்குச் சந்தையை நிர்வகித்து வந்ததும் , சித்ரா ராமகிருஷ்ணா சாமியாரின் கைப்பாவையாக இருந்ததும் தெளிவாகத் தெரிகிறது எனவும் தெரிவித்தது. மேலும் சித்ரா ராமகிருஷ்ணாவின் இந்த செயல் கற்பனைக்கு எட்டாததது எனவும், பங்குச்சந்தையின் அடிப்படை கட்டுமானத்தையே உலுக்கும் செயல் எனவும் செபி கூறியது.
மேலும் விதிகளை மீறி தலைமை மூலோபாய அதிகாரி என்ற பதவியை உருவாக்கி, அதில் ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை நியமித்ததாகவும் சித்ரா ராமகிருஷ்ணா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தநிலையில் நேற்று சித்ரா ராமகிருஷ்ணாவிற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் உள் பரிவர்த்தனை தகவல்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொண்டதன் மூலம், சட்டவிரோத ஆதாயங்களைப் பெற்றார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவித்தன.