Skip to main content

ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல்..? ஆலோசனை செய்யும் ஜி.எஸ்.டி. கவுன்சில்!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

gst

 

இந்தியாவில் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருந்துவருகிறது. இதனையடுத்து இந்தியா முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகள் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை எழுப்பிவருகின்றனர். ஆனால் மத்திய அரசோ, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவருவது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சிலிலேயே முடிவெடுக்க வேண்டும் என கூறிவருகிறது.

 

ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள் அங்கம் வகிக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சிலில், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்படாமல் இருந்துவந்தது. இந்தநிலையில், அண்மையில் கேரள உயர் நீதிமன்றம், பெட்ரோல் - டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து முடிவெடுக்குமாறு ஜி.எஸ்.டி. கவுன்சிலை அறிவுறுத்தியது.

 

இந்தநிலையில், நாளை மறுநாள் (17.09.2021) நடைபெறவுள்ள கூட்டத்தில், பெட்ரோல் - டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்பட்டால், அதன் விலை கணிசமாக குறையும்.

 

அதேநேரத்தில் பெட்ரோல் - டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவந்தால் அரசுகளுக்கான வருவாய் குறையும் என்பதால், உடனடியாக பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்படாது எனவும் தகவல்கள் கூறுகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்