Skip to main content

மணிப்பூரை அடுத்து ஹரியானாவில் வெடிக்கும் வன்முறை; இணைய சேவை முடக்கம்

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

breaks out in Haryana after Manipur issue; Internet service shutdown

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில், அது கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் ஊடக வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு தொடர்ந்து பேசு பொருளாகி வருகிறது. இந்நிலையில் ஹரியானாவில் நான்கு இடங்களில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் கல் வீச்சுகள் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

ஹரியானாவின் நூப் மாவட்டத்தில் குறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் பகுதி வழியாக மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாகச் சென்ற பொழுது இந்த வன்முறை வெடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறிக் கற்களை வீசிக்கொண்டனர். வாகனங்கள் சாலையிலேயே அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதன் காரணமாக நூப் மற்றும் குருகிராம் ஆகிய மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

தொடர் கல்வீச்சால் 15க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்தவும், மேலும் பரவாமல் தடுக்கவும் 13 கம்பெனி துணை ராணுவப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வன்முறை தொடர்பான வதந்திகள் பரவாமல் இருக்க இணைய சேவையும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹரியானா வன்முறை தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்