Skip to main content

"80களுக்கு முன்பு இராமரை பாஜகவிற்கு தெரியாது" - சத்தீஸ்கர் முதல்வர் தாக்கு!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

chhattisgarh cm

 

சத்தீஸ்கர் மாநிலத்தில் இராமாயணத்தைப் பாராயணம் செய்யும் குழுக்களிடையேயான போட்டி ஒன்றை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் போட்டியை அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் நேற்று (09.07.2021) தொடங்கிவைத்தார். அப்போது அவரிடம் இந்தப் போட்டி குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

 

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், பாஜக இராமரை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பூபேஷ் பாகேல், "பாஜக 80களில் இராம ஜென்ம பூமி பிரச்சினையை எழுப்பியது, அவர்களுக்கு ஸ்ரீ ராமரை முன்பே தெரியாது. நமது தலைவர் மகாத்மா காந்தி சுதந்திரத்திற்கு முன்பு ‘ரகுபதி ராகவ் ராஜா ராம்’ என்ற பாடலைப் பாடினார். ராம் ஹமரே ஹை அவுர் ரஹங்கே (ராம் நம்முடையவர், அவர் எப்போதும் நம்முடையவராகவே இருப்பார்). பாஜக அவர்களின் அரசியல் கணக்குகளுக்காக இதைப் பயன்படுத்துகிறது. ராமாயணம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கிராமங்களில் ஓதப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து அவர், “இது நம் கலாச்சாரத்தில் உள்ளது. நம் கலாச்சாரத்திற்காக நாம் ஏதாவது செய்கிறோம் என்றால் பாஜகவுக்கு என்ன பிரச்சினை? அவர்கள் ஒருபோதும் நம் கலாச்சாரத்திற்காக எதுவும் செய்ததில்லை. இப்போது ஏதாவது செய்யப்பட்டால், இராமர் அவர்களிடமிருந்து  பறிக்கப்படுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். இராமர் மீது அவர்களுக்கு ஏதேனும் பதிப்புரிமை இருக்கிறதா? இராமர் அனைவருக்கும் சொந்தமானவர்" எனவும் கூறியுள்ளார்.

 

தொடர்ந்து பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “பெட்ரோல் விலை பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?. டெண்டுல்கரின் சதங்களைப் போலவே பெட்ரோல் விலையும் அதிகரித்துவருகிறது. எரிபொருள் விலை பிரதமரின் வயதுக்கு சமமாக இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அவரது வயதைத் தாண்டிவிட்டது" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்