Skip to main content

“என்னை ஒரு பயங்கரவாதி போல் நடத்துகிறார்கள்” - அரவிந்த் கெஜ்ரிவால்

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
 Arvind Kejriwal says They treat me like a theif

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இந்த சூழலில் கடந்த 02-02-2024 அன்று விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார். 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 7 ஆம் தேதியான இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 17 ஆம் தேதி டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துவாரகா பகுதியில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (08-02-240 அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, “நான் மிகப்பெரிய பயங்கரவாதியைப் போல் மத்திய அரசு எனக்கு எதிராக அனைத்து விசாரணை அமைப்புகளையும் திருப்பி விடுகின்றனர். என்னை ஊழல்வாதி என முத்திரை குத்துகின்றனர். என்னை ஒரு திருடன் என்கிறார்கள், குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குபவர்களுக்கு பெயர் திருடனா?” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்